அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளை எமது ஆட்சியில் பெற்றுக் கொடுப்போம் - கட்டணங்களை செலுத்த ஆறு மாத கால சலுகை வழங்கப்படும் : கொழும்பு மாவட்ட வேட்பாளர் மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 30, 2020

அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளை எமது ஆட்சியில் பெற்றுக் கொடுப்போம் - கட்டணங்களை செலுத்த ஆறு மாத கால சலுகை வழங்கப்படும் : கொழும்பு மாவட்ட வேட்பாளர் மரிக்கார்

(செ.தேன்மொழி)

அரசாங்கத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளை தங்களது ஆட்சிக் காலத்தில் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் எஸ்.எம்.மரிக்கார், முச்சக்கர வண்டி, தனியார் பஸ்களுக்கான குத்தகை தவணைக் கட்டணங்களை செலுத்துவதற்காக ஆறு மாத கால சலுகை வழங்கப்படும் என்றும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனின் சர்ச்சைக்குரிய கருத்தை பொருட்படுத்த வேண்டாம் என்றும் அதனை மறந்துவிடுமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தலதா மாளிகை மீதான தாக்குதலும், அறந்தலாவை பிக்குகள் படுகொலையும் தனது ஆணையின் பேரிலே இடம்பெற்றது என்றும் கருணா அம்மான் தெரிவித்தால், அதனையும் பொருட்படுத்த வேண்டாம் என்று கூறுவார்களா? 

இராணுவத்தினரை காண்பித்து ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொண்டவர்கள். தற்போது இராணுவத்தினரை கொலை செய்ததாக பெருமை கொள்ளும் ஒருவரை காப்பாற்றி வருகின்றனர்.

ஆளும் தரப்பினர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் கருணா அம்மானுக்கு இடையில் தொடர்பிருப்பதாக காண்பிக்க முயற்சித்து வருகின்றனர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா விடுதலை புலியினருக்கு ஆயுதங்களை வழங்கியதாக கூறி வருகின்றனர். 

எம்நாட்டு இராணுவத்தினரை பாதுகாத்து இந்திய இராணுவத்தினரை விரட்டுவதற்காகவே அவர் விடுதலை புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்ததாக கூறப்படுகின்றது. இதில் எந்த தவறையும் காண முடியாது. தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக விடுதலை புலிகள் இயக்கத்திற்கு யார் நிதி வழங்கினார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.

எம்.சீ.சீ. ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் இலங்கைக்குள் இருக்கும் இடங்களுக்கு செல்லவே அமெரிக்காவிடம் வீசா பெற வேண்டும் என்று கூறினார்கள். இவ்வாறான ஒப்பந்தத்தை நாங்கள் கைச்சாத்திட முயற்சிப்பதாக மக்களுக்கு தெரிவித்து வந்தார்கள். இதனால் ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெற்றார்கள். இவ்வாறெல்லாம் கூறி ஆட்சியையும் கைப்பற்றிய பின்னர் ஒப்பந்தத்தை ஆராய்ந்து பார்க்க குழுவை நியமித்தார்கள். 

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்தால் எம்.சீ.சீ ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவோம் என்ற எண்ணத்திலே ஆளும் தரப்பினர் செயற்பட்டு வருகின்றனர். எமது ஆட்சியின் போது நாங்கள் ஒருபோதும் இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட போவதில்லை.

தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கிருந்த வரவேற்பு பெருமளவில் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனால் உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும்.

இதேவேளை முச்சக்கர வண்டிகள், தனியார் பஸ்களுக்கான குத்தகை தவணைக் கட்டணங்களை செலுத்துவதற்காக சலுகைக் காலத்தை பெற்றுக் கொடுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும் அது முறையாக செயற்படுத்தப்படவில்லை. எமது ஆட்சியில் நாங்கள் இதற்காக ஆறு மாத கால சலுகையை பெற்றுக் கொடுப்போம்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரச ஊழியர்களுக்காக 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும், 75 வீதமான ஊழியர்கள் ஜனாதிபதி தேர்தலில் எமக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர். அவர்களுக்கு ஒன்றை தெரிவிக்க விரும்புகின்றோம். நீங்கள் உருவாக்கிய அரசாங்கம் உங்களின் விசேட கொடுப்பனவுகளை இரத்து செய்துள்ளது. 

எங்களது ஆட்சிக் காலத்திலே அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ள கொடுப்பனவுகளை மீள பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.

No comments:

Post a Comment