பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிற்கு புதிய பிரதானி நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 30, 2020

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிற்கு புதிய பிரதானி நியமனம்

(எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பிரதானியாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக தரமுயர்த்தப்பட்ட, பதில் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் சேவையாற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஜி.கே. ஜி.அபோன்சு நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வாய்மொழி மூல அனுமதியின் பிரகாரம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பிரதானியாக செயற்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ மெதவத்தவை பொலிஸ் நலன்புரிப் பிரிவிற்கு இடமாற்றம் செய்ய பதில் பொலிஸ் மா அதிபர் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள நிலையிலேயே, புதிய பிரதானிக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலர் என்.ஏ.வீரசிங்க குறிப்பிட்டார்.

நியமனம் மற்றும் இடமாற்றம் ஆகிய இரண்டும் வாய்மொழி மூலமான அனுமதியின் பிரகாரம் வழங்கப்பட்டதாகவும், இது தொடர்பான எழுத்து மூல அனுமதியை நாளைமறுதினம் ஆணைக்குழு கூடிய பின்னர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு, அங்கு சேவையாற்றும் பலரை இடமாற்றி, அந்த பிரிவில் இடம்பெற்றுள்ள மோசடிகளை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது சி.ஐ.டி. விசாரணை செய்துவரும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருளினை மீள கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அவ்வாறான பின்னணியில் விசாரணைகள் சுயாதீனமாக எந்த தடையும் இன்றி இடம்பெறுவதை உறுதி செய்ய பலர் அங்கிருந்து இடமாற்றப்படலாம் என தெரிகின்றது.

அதன் முதல் கட்டமாகவே, இதுவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பிரதானியாக செயற்பட்ட சஞ்ஜீவ மெதவத்த இடமாற்றப்பட்டு அவ்விடத்துக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அபோன்சு நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment