பன்றிகளிடம் பரவும் புதிய வகை தொற்று நோய் வைரஸ் - சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 30, 2020

பன்றிகளிடம் பரவும் புதிய வகை தொற்று நோய் வைரஸ் - சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தொற்று நோயைத் தூண்டும் புதிய வகை வைரஸ் குறித்து சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவின் உகான் நகரில் இருந்து வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மற்ற வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகளின் கூட்டுக்கலவையை பயன்படுத்தி நோயாளிகளை குணப்படுத்தி வருகின்றனர். 

ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவிவிடுவதால் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் மக்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டிருப்பதுடன், உலக பொருளாதாரமும் கடுமையாக சரிந்துள்ளது.

கொரோனா வைரசின் அச்சுறுத்தல் இன்னும் நீங்காத நிலையில், இப்போது பன்றிகளில் பரவி வரும் புதிய வகை வைரசை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய அறிவியல் இதழில் இது தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

‘பன்றிகளில் பரவி வரும் இந்த புதிய வகை வைரஸ், தொற்று நோயை தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது மரபணு ரீதியாக எச்1 என்1 வைரசிடம் இருந்து வந்துள்ளது. இந்த புதிய வகை வைரஸ் ஜி4 என அழைக்கப்படுகிறது. 

ஆராய்ச்சியாளர்கள் பன்றிகளிடம் சோதனை மேற்கொண்டதில், ஜி4 வைரசால் பன்றிகள் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியிருப்பதும் தெரியவந்துள்ளது.

அதேசமயம், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவியதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் விலங்குகளிடம் அதிக தொடர்பில் இருப்பவர்களை கண்காணிக்க அவசர நடவடிக்கைகள் தேவை.’ என ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.

மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் உள்ளவர்கள், குறிப்பாக பன்றித் தொழிலில் உள்ள தொழிலாளர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad