எம்.சி.சி ஒப்பந்ததை வைத்து அரசியல் இலாபம் தேட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது - செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Monday, June 29, 2020

எம்.சி.சி ஒப்பந்ததை வைத்து அரசியல் இலாபம் தேட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது - செஹான் சேமசிங்க

(இராஜதுரை ஹஷான்)

எம்.சி.சி ஒப்பந்ததை வைத்து அரசியல் இலாபம் தேட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டுக்கு எதிராக முன்னெடுத்த திட்டங்கள் அனைத்தும் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. கிடைக்கப் பெற்ற நிதி தொடர்பான விசாரணைகளும் துரிதமாக முன்னெடுக்கப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் பொதுத் தேர்தலின் வெற்றியை இலக்காகக் கொண்டு தற்போது எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பான மீளாய்வு அறிக்கையினை வெளியிட்டிருப்பதாக எதிர்தரப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

எம்.சி.சி ஒப்பந்தத்தை வைத்து தற்போது அரசியல் செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. ஒப்பந்தத்தின் பாரதூரமான விடயங்களை எதிர்ககட்சி பதவி வகிக்கும் போது மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

எம்.சி.சி ஒப்பந்தத்தின் மீளாய்வு அறிக்கையில் பல்வேறு உண்மை தன்மைகள் வெளிவந்துள்ளன. இரகசியமான முறையில் ஐக்கிய தேசிய கட்சி நாட்டுக்கு எதிராக முன்னெடுத்த திட்டங்கள் தற்போது வெளிவந்துள்ளன. கிடைக்கப் பெற்றதாக குறிப்பிடப்படும் நிதி தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

மீளாய்வு அறிக்கையின் உள்ளடக்கம் அனைத்தும் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் இவ்விடயம் தொடர்பில் உரிய தீர்மானத்தை எடுப்பார்கள்.

அரசியல் சூழ்ச்சி, பிறர் மீது சேறுபூசல் ஆகியவற்றை முன்னெடுத்து ஆட்சியை கைப்பற்றுவது பலவீனமான அரசாங்கத்தையே தோற்றுவிக்கும். நாட்டுக்கு பொருந்தும் வகையில் கொள்கைத்திட்டங்களை வகுத்துள்ளோம்.

அடுத்த மாதம் முதல் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். பொதுஜன பெரமுன இம்முறை அதிகளவில் கூட்டங்களை நடத்தாது. இணையத்தள வழிமுறைகளின் ஊடாக தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கவே அதிகளவில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment