தேர்தல் தின மனு பரீசீலனை மீண்டும் நாளை வரை ஒத்தி வைப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 19, 2020

தேர்தல் தின மனு பரீசீலனை மீண்டும் நாளை வரை ஒத்தி வைப்பு

ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மற்றும் ஜனாதிபதியினால் மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களின் பரீசீலனை நாளை (20) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இம்மனுக்கள் மீதான விசாரணை இன்று (19) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் புவனேக அலுவிகாரே,சிசிர அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த மனுக்கள் நேற்றும் (18) இன்றும் (19) பரிசீலிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை காலை 10.00 மணிக்கு மீண்டும் இம்மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் குழாம் அறிவித்தது.

இன்று ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் இக்ராம் மொஹமட், பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் சார்பில் விரான் கொராயா, சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம், ரஞ்சித் மத்தும பண்டார தரப்பிற்காக சுரேன் பெனாண்டோ ஆகியோர் தமது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளர்.

குறித்த மனுக்களில் தேர்தல் ஆணைக்குழு, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட ஆணைக்குழு உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர், சட்டமா அதிபர் ஆகியோர் இதில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad