அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி அதிகரிப்புக்கு முறைகேடான ஆட்சிமுறையே காரணம் - News View

Breaking

Post Top Ad

Saturday, May 23, 2020

அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி அதிகரிப்புக்கு முறைகேடான ஆட்சிமுறையே காரணம்

(செ.தேன்மொழி) 

அரசாங்கத்தின் முறைகேடான ஆட்சி முறையின் காரணமாகவே அத்தியவசிய பொருட்களுக்கு வரி அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டி ஏற்படும் என்றும் எச்சரித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் நிதி முகாமைத்துவம் முறையாக மேற்கொள்ளாமையே, அரசாங்கத்தின் ஆட்சி முறையிலுள்ள சிக்கலே இதற்கு காரணம். அதனாலேயே இன்று பெருமளவான அத்தியவசிய பொருட்களின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மாளிகாவத்தை அனர்த்தமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையே காண்பித்துள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்திருந்தனர். இதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். வைரஸ் பரவலினால் எவ்வித வருமாணமுமின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய முறையில் ஐயாயிரம் ரூபாய் நிவாரணத்தை வழங்கியிருந்தால், மக்கள் இவ்வாறு உயிரிழக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.

தொடர்ந்தும் காலங்கடத்தாமல் இந்த நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அரிசிக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. இது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

5000 நிவாரணமும் சமூர்த்தி நிதியத்திலிருந்தே வழங்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். இதுவும் சாதாரண மக்களின் நிதியாகும். அதனால் தற்போது எடுக்கப்பட்டுள்ள நிதியை மீண்டும் சமூர்த்தி நிதியத்தில் சேர்ப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். 

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர உட்பட பொருளாதார முகாமைத்துவம் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் பொறுப்புக்கூறவேண்டிய காலம் உருவாகும். அதனால் அனைவரும் அதற்கு தயாராகவே இருக்க வேண்டும். 

கூறுவதை செய்யும், செய்வதையே கூறும் குணம் படைத்தவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மாத்திரமே. அதனால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவருக்கே பெரும்பான்மை ஆதரவை பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் தற்போது தெளிவு பெற்றிருக்கீன்றார்கள் என்று கருதுகின்றோம். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்களில் பெருந்தொகையானோர் இன்று எம்முடன் இணைந்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad