பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தொடர்ந்தும் பதவி வகிப்பது சட்டவிரோதமானது - அமெரிக்க குடியுரிமை பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் பேர் போன ஒருவரை நியமித்துள்ளனர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 6, 2020

பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தொடர்ந்தும் பதவி வகிப்பது சட்டவிரோதமானது - அமெரிக்க குடியுரிமை பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் பேர் போன ஒருவரை நியமித்துள்ளனர்

(செ.தேன்மொழி) 

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் முடிவடைந்துள்ளதாக தெரிவித்து வரும் அரசாங்கம், அந்த பாராளுமன்ற தேர்தலிலேயே தற்போதைய பிரதமர் மற்றும் அமைச்சரவையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மறந்து செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைகளின் பதவிக் காலமும் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், இவர்கள் தொடர்ந்தும் பதவி வகிப்பது சட்ட விரோதமானது எனவும் கூறினார். 

இந்நிலையில் அவர்களுக்கான சம்பளத்தை கொவிட் -19 வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறும் கோரிக்கை விடுத்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொவிட் -19 வைரஸ் பரவலின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்கள் அதிகளவில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் முதற்கட்டமாக பகிர்ந்தளிக்கப்பட்ட 5000 ரூபாய் நிவாரணப் பணம் இன்னும் முழுமையாக பகிர்ந்தளிக்கப்படவில்லை. 

கொழும்பு உள்ளிட்ட ஆட்புலக்கம் அதிகமான பகுதிகளில் வாடகை வீடுகளில் வசித்து வரும் குடும்பங்களுக்கு இதுவரையிலும் எந்தவிதமான நிதிவுதவிகளும் கிடைக்கப்படவில்லை. இவ்வாறான நிலையிலே நாட்டிலுள்ள குடும்பங்களுக்கும் அதிகமான நிவாரணம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் பெருமைக்கொள்கின்றார். 

இதேவேளை பாராளுமன்றத்தில் உறுப்புரிமையற்ற, அரச நிர்வாகப் பிரிவிலும் பணியாற்றாத அமெரிக்க குடியுரிமை பெற்றிருக்கும் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பில் பெரும் குற்றச்சாட்டுகளும், வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்ற நபரான பசில் ராஸபக்ஷவே இன்று நிதி தொடர்பான முகாமைத்துவத்தை மேற்கொண்டு வருகின்றார். இவருக்கு எங்கிருந்து இந்த அதிகாரம் கிடைக்கப்பெற்றது. 

ஜனாதிபதி செயலணியில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியை படிப்படியாக தாழ்த்தி, பெருந்தொகையான நிதிகள் நாட்டுக்குள் கிடைக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அதனை முகாமைத்துவம் செய்ய நிதி மோசடி தொடர்பில் பேர் போன ஒருவரை நியமித்துள்ளனர். பசில் ராஜபக்ஷவின் மீது எமக்கு நம்பிக்கையில்லை. பல மோசடிகள் தொடர்பில் பேர் போன குற்றவாளியான இவர் வைரஸ் பரவல் தொடர்பில் கிடைக்கப்பெறும் நிதியிலும் மோசடிகளை செய்யமாட்டார் என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது. 

இதனாலேயே பாராளுமன்றத்தை கூட்டுமாறு அறிவித்தோம். அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அப்படியென்றால் களைக்கப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்களே அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்பையும் பிரதமர் பொறுப்பையும் பொறுப்பேற்று இருக்கின்றனர். 

ஆனால் அவர்களுக்கான சம்பளம் இன்னும் வழங்கப்படுகின்றது. அப்படியென்றால் அவர்களது பதவிக்காலமும் தற்போது நிறைவடைந்திருக்கும் தானே. அதனால் அவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் சம்பளத்தை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். 

வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இலங்கையில் மாத்திரமே பெரும் தொகையான இராணுவத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் முகக் கவசங்கள் மாத்திரமே வழங்கியுள்ளனர். வேறெந்த பாதுகாப்பு உபகரணங்களும் பகிர்தளிக்கப்படவில்லை. இதனால் அவர்களை பாதுகாப்பது முக்கிய பொறுப்பாகும். 

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எமக்கு பல கேள்விகள் இருக்கின்றன பாராளுமன்றம் மீண்டும் அமுல்படுத்தினாலே இது தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும். இதை விடுத்து அலரி மாளிகையில் பிரதமரின் தலைமையில் கூடும் விளையாட்டு பாராளுமன்றத்தில் எந்த சந்தேகத்தையும் தீர்த்துக் கொள்ள முடியாது.

No comments:

Post a Comment