ஈராக் நாட்டின் புதிய பிரதமராக முஸ்தபா அல் காதிமி பதவியேற்றார் ! - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

ஈராக் நாட்டின் புதிய பிரதமராக முஸ்தபா அல் காதிமி பதவியேற்றார் !

ஈராக்கின் உளவுத்துறை தலைவரும், முன்னாள் பத்திரிகையாளருமான முஸ்தபா அல் காதிமி வியாழக்கிழமை அதிகாலை ஈராக்கின் புதிய பிரதமராக பதவியேற்றார். 

பல மாத காலமாக நிலவிய அரசியல் நெருக்கடி, பெரும் பொருளாதார நெருக்கடி, கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கிடையிலேயே அவர் ஆட்சி பீடமேறியுள்ளார். 

முஸ்தபா அல் காதிமியை பிரதமராக நியமிப்பதற்கு ஈராக்கின் பாராளுமன்றம் ஒரு புதிய அரசாங்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. எனினும் அவரது அமைச்சரவைக்காக பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே முழு அமைச்சர்கள் இல்லாம் அவர் தனது பதவிக் காலத்தை தொடங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸை ஒழிப்பதே தமது பிரதான கடப்பாடு என பிரதமாக பதவியேற்ற முஸ்தபா அல் காதிமி சுட்டிக்காட்டியுள்ளார். 

ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதை கண்டித்து, அப்போதைய பிரதமர் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். 

நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கியதால், அரசு இரும்பு கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது. பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்களால் சுமார் 400 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஆனாலும் மக்களின் போராட்டம் ஓயாமல், நாளுக்குநாள் மேலும் தீவிரமடையத் தொடங்கியது. இதனால் நவம்பர் மாத இறுதியில் பிரதமர் பதவியை அப்துல் மஹ்தி ராஜினாமா செய்தார். 

அதன் பிறகு ஈராக்கின் புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் முகமது தவுபிக் அலாவியை, கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி பர்ஹாம் சாலி நியமித்தார். 

அவரை பிரதமராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பு பெப்ரவரி நடத்த திட்டமிடப்பட்டு, பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. 

இதன் பின்னர் மார்ச் மாதம் கூடிய பாராளுமன்றில் நம்பிக்கை வாக்கெடுப்பில் போதுமான ஆதரவு கிடைக்காததால், முகமது தவுபிக் அலாவி பதவி விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad