மலையகத்தில் கடும் மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஆலயம், பாடசாலை, குடியிருப்புகளில் வெள்ளம், போக்குவத்து தடை - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 19, 2020

மலையகத்தில் கடும் மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஆலயம், பாடசாலை, குடியிருப்புகளில் வெள்ளம், போக்குவத்து தடை

மலையகத்தில் தொடரும் காற்றுடன் கூடிய கடும் மழையுடனான காலநிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் தொடர் மழையினால் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் குடியிருப்புகள், ஆலயங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வீதி போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன. அத்துடன், நாவலப்பிட்டி நகரமும் நீரில் மூழ்கியுள்ளது.

அட்டன் - கொழும்பு வீதியின் தியகல, அட்டன் - மஸ்கெலியா பிரதான வீதி, அட்டன் - தலவாக்கலை பிரதான வீதியின் வூட்டன் பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதுடன், சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, பொகவந்தலாவ, கொட்டியாகலை கிழ்பிரிவு தோட்டத்திலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் லயன் குடியிருப்பொன்று பகுதியளவில் நீரில் மூழ்கியுள்ளது.

குறித்த லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 14 வீடுகளைக் கொண்ட குடியிருப்புத்தொகுதியைச் சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை தங்கவைப்பதற்கான நடவடிக்கையினை தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சாமிமலை ஒல்டன் கீழ் பிரிவிலும் அதிக. மழையினால் ஆற்றடி பிள்ளையார் ஆலயம் அதனை சூழ உள்ள குடியிருப்புகளும் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும் காசல்ரீ நீர்த்தேக்கத்துடன் இணையும் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்தமையினால் பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட பிரதான பாதையில் போக்குவரத்து பாதிப்படைந்ததுடன் போடைஸ் ஆறு பெருக்கெடுத்தமையினால் ஆற்றின் கரையோர குடியிருப்புகளும் வெள்ளம் புகுந்தமையினால் குடியிருப்பாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இதேவேளை, மஸ்கெலியா மவுசாகலை, காசல்ரி, நோட்டன் விமலசுரேந்திர, மேல்கொத்மலை நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைவதனால் கரையோர பகுதியிலுள்ளவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் மின்சாரசபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சாமிமலை, கவரவில தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு பாடசாலை கட்டிட தொகுதி மற்றும் அதன் அருகில் உள்ள குடியிருப்புகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் குறித்த பகுதி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதேவேளை, டீசைட் தோட்டத்தில் பெண் தொழிலாளியொருவர் மின்னல் தாக்கத்திற்குட்பட்ட நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் பிரதான வீதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவினை அகற்ற வீதி போக்குவரத்து அதிகார சபை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா

No comments:

Post a Comment

Post Bottom Ad