எதிர்த்தரப்பினருக்கு சார்பாகவே தேர்தல் ஆணைக்குழு செயற்படுகின்றது : செஹான் சேமசிங்க - News View

Breaking

Post Top Ad

Friday, May 22, 2020

எதிர்த்தரப்பினருக்கு சார்பாகவே தேர்தல் ஆணைக்குழு செயற்படுகின்றது : செஹான் சேமசிங்க

(இராஜதுரை ஹஷான்) 

தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை மீது தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. பொதுத் தேர்தலை பிற்போட வேண்டும் என்று எதிர்த்தரப்பினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆணைக்கு சார்பாக செயற்படுகிறது. மக்களின் ஜனநாயக உரிமையினை நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் பிற்போடும் போது ஆணைக்குழு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. 

பாரிய போராட்டங்களின் மத்தியில் கடந்த அரசாங்கத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அரசியல் தேவைகளுக்காக மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. 

ஜூன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது என ஆணைக்குழு உயர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளமை எதிர்த்தரப்பினருக்கே சார்பாக அமைந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டதன் பிறகும், தற்போது நாட்டில் நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்றது. அத்துடன் வைரஸ் தொற்று சமூக தொற்றாக பரவுவதற்கு வாய்ப்பு கிடையாது என சுகாதார துறை குறிப்பிட்டதன் பிறகே, அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை பாதுகாப்பான முறையில் செயற்படுத்தப்பட்டன. 

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பெருமளவில் பாதிக்கப்பட்ட நாடுகள் தற்போது வழமை நிலைமைக்கு திரும்பியுள்ளன. ஒரு சில நாடுகளில் தேர்தல்களும் பாதுகாப்பான முறையில் நடைபெற்றுள்ளன. 

எமது நாட்டில் எதிர்த்தரப்பினர் மக்களின் நலனை கருத்திற்கொண்டு பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என குறிப்பிடவில்லை. சுயநல அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே பொதுத் தேர்தலை நடத்த தடையாக செயற்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள். 

எதிர்த்தரப்பினருக்கு சார்பாகவே தேர்தல் ஆணைக்குழு செயற்படுகின்றது. ஜனநாயக உரிமை தற்போது கேள்விக்குற்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றம் மக்களின் வாக்குரிமையினை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad