தேர்தல் திகதிக்கு எதிரான மனு மீதான பரிசீலனை இன்று - News View

Breaking

Post Top Ad

Monday, May 18, 2020

தேர்தல் திகதிக்கு எதிரான மனு மீதான பரிசீலனை இன்று

ஜூன் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலையும் ஜனாதிபதியினால் மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலையும் சவாலுக்கு உட்படுத்தி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்றும் (18) நாளையும் (19) பரிசீலனைக்கு எடுக்க இருக்கின்றது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை 05 நீதிபதிகள் கொண்ட குழாம் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய நீதியரசர்கள் புவனெக அலுவிகார ,சிசிர ஆப்ரு ,பியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் இந்த நீதிபதிகள் குழாமில் அடங்குகின்றனர்.

இதன் பிரகாரம் 07 மனுக்களும் 09 இடைநிலை தரப்பு மனுக்களும் இன்றைய விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளன.

சட்டத்தரணி சரித்த குணரத்னவினால் முதலில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அடுத்து ரஞ்சித் மத்துமபண்டார, பாட்டளி சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம, பிரியந்த ஜயவர்தன, விஜித மலல்கொட உள்ளிட்ட குழுவினர் தேர்தல் ஆணைக்குழு, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியின் செயலாளர் சட்டமா அதிபர் ஆகியோர் இதில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இன்றைய விசாரணைகளை அடுத்து ஏனைய மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நாளை (19) முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த வழக்குகள் விசாரிக்கப்படும் இரு தினங்களும் உச்ச நீதிமன்றப் பகுதியில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்றைய தினங்களில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்குகளை விசாரிப்பதற்கு மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நீதிமன்ற விசாரணைகளின் போது வழக்குகளுடன் தொடர்புபட்டவர்களை தவிர வேறு எவரும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று பிரதம நீதியரசர் அலுவலகம் அறிவித்துள்ளது.

(எம்.ஏ.எம். நிலாம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad