விமர்சனங்களின் இயலாமை - இது ஒரு அரசியல் பதிவு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 7, 2020

விமர்சனங்களின் இயலாமை - இது ஒரு அரசியல் பதிவு

கடந்த 4 ஆம் திகதி பிரதமரினால் அழைப்பு விடுக்கப்பட்டு கடந்த 2015,2010 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் இடம்பெற்றது.

இதில் முஸ்லிம் சமூகம் சார்ந்த முதன்மையான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முஸ்லிம் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ள வில்லை.

இது தொடர்பாக ரவுப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் ஆகியோர் மீது ஒரு சிலரின் விமர்சனங்கள் எதிர்வினையாக முன்வைக்கப்படுவதை காணக்கிடைத்தது.

அவர்கள் இருவரும் தேச துரோகம் செய்தது போன்றும் சமூக அநீதியை உண்டுபண்ணியது போலவும் சித்தரிக்கப்படும் ஆவேசம் சிலரிடமிருந்து பக்குவமில்லாமலும் எழுதப்பட்டிருந்தது.

முதலில் இத்தகைய விமர்சனக்காரர்களை ஒரு வரிசையில் வைத்துப் பார்த்தால் அனைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராகவே எழுதுகின்றவர்களாகவும் பேசுகின்றவர்களாகவும் இருக்கும் ஒரு தொடர்ச்சியை காணலாம்.

மறுபுறம் இவர்கள் தற்போது மொட்டுக் கட்சி ஆதரவாளர்களாகவும் அதாவுல்லா தரப்பினர்களாகவும் இருப்பதையும் ஆங்காங்கே முகம் காட்டுகின்றது.

இதில், இவர்கள் ஒரு கட்சியின் ஆதரவாளர்களாக இருந்துகொண்டு மற்றய கட்சியின் நடத்தைகளை விமர்சிக்க வருகின்ற போது “சமூகம்” என்ற அக்கறையுள்ளவர்களாக தங்களை காட்ட முனைவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

எனவே இவர்களது விமர்சனங்களின் இயலாமை என்பது தாங்கள் சார்ந்த கட்சியை உதாரணப்படுத்தி அதன் செயற்பாடுகளை தங்கள் விமர்சனங்களில் முன்வைக்க முடியாமல். எதிர்கட்சி எது செய்தாலும் அதனை பிழையாக்கிக் கொண்டிருக்கும் ஒரு கண்மூடித்தனமான விமர்சனப் போக்கை இவர்கள் கைகொள்கிறார்கள்.

உண்மையில் இவர்கள் ஒரு கட்சி சார்ந்தவர்களாக இருந்தால் அந்த கட்சியின் தலைவரும் அக்கட்சிக்கார்களும்தான் அவர்கள் விரும்பும்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும். மாறாக மற்றக் கட்சிக்காரர்களையும் தாங்கள் விரும்பும்படிதான் நடக்க வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்த்து எல்லாவற்றையும் விமர்சிக்க முற்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது.

எந்த கட்சியும் சாராத சமூகம் சார்ந்த விமர்கர்தான் எல்லாக் கட்சிகளின் போக்கையும் சமூகம் சார்ந்து விமர்சிக்கத் தகுதியுடையவர், அத்தகையவரின் விமர்சனத்தில் ஒரு கட்சியின் மீது சரியை சரி என்றும் பிழையை பிழை என்றும் சொல்லும் விமர்சன நேர்மை இருக்கும்.

மாறாக ஒரு கட்சியீன் தீவிர பற்றாளராக இருந்துகொண்டு மற்றக் கட்சியை விமர்சிக்க முன்வருகின்றவர். மற்றைய கட்சிகளை விட்டுவிட்டு தான் சார்ந்த கட்சி என்ன செய்கின்றது என்பதை முன்வைத்து தனது கருத்துக்களை பகிர்ந்தாலே போதும். முஸ்லிம் அரசியல் பாதி திருந்திவிடும்.

இங்கு நானும் இக்கருத்தினை மிகத் தெளிவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்ந்தே எழுதுகின்றேன்.

அதாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்கின்றவர்களை விமர்சனம் செய்கின்றேன்.

இதன்படி, கடந்த பிரதமரின் கூட்டத்திற்கு தலைவர் ரவுப் ஹக்கீம் செல்லவில்லை என்ற விமர்சனங்களை செய்கின்றர்வர்கள். முதலில் உங்கள் கட்சி சார்பாக சென்றவர்கள் உதாரணமாக அதாவுல்லா சென்றிருந்தால், அவர் அக்கூட்டத்தில் கலந்துகொண்டு இதை இதை எல்லாம் சாதித்திருக்கிறார் என்று ஒரு பட்டியலைப் போட்டு அவரது செயற்பாடுகளை நன்கு விபரித்துவிட்டு பிறகு இவர்களும் சென்றிருந்தால் இதனை செய்திருக்கலாம் என்று கூறினால் நாமும் அது பற்றி சிந்திக்கலாம்.

ஆனால், அவ்வாறு இல்லாமல் போனவர் எதுவும் செய்யாவிட்டாலும் குற்றமில்லை அது தவறுமில்லை. இங்கு போகாதர்கள்தான் பெரும் குற்றவாளிகள் என்ற அர்த்தமற்ற விமர்சனங்களை செய்கின்றர்வள், இனியாவது உங்கள் கட்சிகளுக்குள் ஊடுவுருங்கள். அதை எழுதுங்கள் கட்சிக்கு ஆதரவைத் திரட்டுங்கள்.

ஏன் மற்றவரின் சோற்றை நீங்கள் பிசைந்து கொண்டிருக்கின்றீர்கள்.

சிலர், முகநூலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் ரவுப் ஹக்கீமுக்கும் எதிராக எதையாவது எழுதிக் கொண்டிருந்தால் தங்களது கட்சிக்கு ஆதரவு கூடும் என்று சிறுபிள்ளைத் தனமாக கண்டதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது இவர்கள் உரிய கூட்டத்திற்கு போகவில்லை என்று எழுதுகின்றார்கள். இதே நபர்கள் மேற்படி கூட்டத்திற்கு ரவுப் ஹக்கீம் சமூகமளித்திருந்தால் என்ன சொல்லி இருப்பார்கள். இவர்களில் யாராவது ஒருவர் அதனை சரிகண்டு “ரவுப் ஹக்கீம் கலந்துகொண்டு எமது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திவிட்டார்” என்று எழுதி இருப்பார்களா?

நிச்சயமாக இருக்காது.

மாறாக என்ன சொல்லியிருப்பார்கள் தெரியுமா?

“ரவுப் ஹக்கீம் கூட்டத்திற்கு செல்லாதிருந்திருக்கலாம் அங்கு சென்று அவர் அறிக்கை இட்டதால்தான் இந்தப் பிரச்சினை அவர் அறிக்கை விடாதிருந்திருக்கலாம்” என்றுதான் சொல்லியிருப்பார்கள், (மிக அண்மித்த உதாரணம்தான் இது)

ஆக, இவர்கள் போனாலும் எழுதுவார்கள் போகவில்லை என்றாலும் எழுதுவார்கள்,

மர்ஹும் கா.மு.ஷெரிப் எழுதிய ,

“வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா” என்ற பாடல் வரிகளுக்கு இவர்கள்தான் மிகச் சரியான உதராணகாரர்கள்.

இன்னும் ஒரு உதாரணம்,

மாற்று அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் போது சமூகத்திற்கு ஏதாவது அநீதி நடந்தால்,

“சமூகம் அழியுது அமைச்சுப் பதவிகளை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள், சமூகத்திற்காக அதை தூக்கி எறிந்துவிட்டு வெளியே வாருங்கள்” என்று குதிப்பார்கள்.

மற்றவிதமாக எமது தலைவர்கள் ஆட்சியின் பக்கம் இல்லாமல் தற்போதுள்ளது போன்று எதிர்கட்சியிலிருந்தால்,
அதே நபர்கள் எப்படிச் சொல்வார்கள்.

“தூர நோக்கு இல்லாமல் ஜனாதிபதித் தேர்தலில் தோற்கும் வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்து சமூகத்தை காட்டிக் கொடுத்துவிட்டார்கள். அரசாங்கத்திற்கு எதிரானவர்களாக எமது சமூகத்தை வழி நடத்திவிட்டார்கள்”

என்று மாறி அதே மாவை இடிப்பார்கள்.

ஆக, மற்றக் கட்சி ஆட்சியிலிருந்தால் அமைச்சுப் பதவியை விட்டு வெளிவரவேண்டும். தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசாங்கத்தை எதிர்க்காமல் ஒட்டி இருக்க வேண்டும். இது என்ன நியாயத்தைக் கொண்ட விமர்சனம் என்று பாருங்கள்.

எனவே, இங்குள்ள விமர்சன இயலாமை என்பது இதுதான். தாங்கள் ஒரு கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து கொண்டு மற்ற கட்சி தாங்கள் விரும்பும் படி நடக்க வேண்டும் என்று மடமையாக விமர்சிப்பதுதான்.

இது எந்தக் கட்சிக்கும் உகந்த பண்பல்ல.

பொதுவாக, தங்கள் கட்சி என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதுதான் மக்களின் கேள்வியாக இருக்கிறதே தவிர, மற்றக் கட்சியை நீங்கள் விமர்சிக்க வேண்டும் என்பது மக்களின் தேவையோ விருப்பமோ அல்ல.

நவாஸ் சௌபி

No comments:

Post a Comment