ஜப்பானில் அவசர நிலையை மேலும் நீட்டித்து உத்தரவிட்டார் பிரதமர் ஷின்ஜோ அபே - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 6, 2020

ஜப்பானில் அவசர நிலையை மேலும் நீட்டித்து உத்தரவிட்டார் பிரதமர் ஷின்ஜோ அபே

ஜப்பானில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் அங்கு இன்று முடிவுக்கு வர இருந்த அவசர நிலையை மேலும் நீட்டித்து பிரதமர் ஷின்ஜோ அபே உத்தரவிட்டுள்ளார்.

ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அங்கு புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதே போல் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அதன்படி ஜப்பானில் இதுவரை 15 ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 549 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மாதம் 7ம் திகதி டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட 7 மாகாணங்களில் பிரதமர் ஷின்ஜோ அபே அவசர நிலையை அமுல்படுத்தினார். அதன் பிறகு கடந்த 16ம் திகதி இந்த அவசர நிலை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த நிலையில் நாடு தழுவிய அவசர நிலை இன்று (புதன்) முடிவடைய இருந்த நிலையில், அவசர நிலையை நீட்டிப்பது குறித்து பிரதமர் ஷின்ஜோ அபே உயர்மட்ட அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து, அவசர நிலை வருகிற 31ம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “உடல் ரீதியான இடைவெளியை அடிப்படையாக கொண்ட புதிய வாழ்க்கை முறைகளை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவசர நிலை நீட்டிப்பு என்பது அடுத்த கட்டத்திற்கு தயாராகவும், அவசரகால நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

மேலும் அவர் “கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக இந்த குறைவு இலக்கு நிலையை எட்டவில்லை. நாடு சுகாதார நெருக்கடியில் இருப்பதால், மக்களிடமிருந்து எங்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தேவை” என்றார்.

ஜப்பானில் அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில், மக்களின் உடல்நலனோடு, பொருளாதாரத்தை படிப்படியாக மீட்க அரசு திட்டமிட்டு வருகிறது.

பொதுமக்கள் கூடும் இடங்களான நூலகம், அருங்காட்சியகம் மற்றும் பூங்காக்களை உரிய சமூக இடைவெளியுடன் மீண்டும் திறக்கவும், கிராமப்புற மாகாணங்களில் கட்டுப்பாடுகளை மெதுவாக தளர்த்தவும் அரசு முடிவு செய்திருக்கிறது.

ஆனால் மாகாணம் தழுவிய போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடையை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 13 மாகாணங்களில் தற்போது அமலில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

80 சதவீதம் அளவுக்கு சமூக தொடர்புகளை குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ள அரசு, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் போது முக கவசம் அணிவதோடு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad