யாழில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான வீதி விபத்துக்கள் - வைத்தியர் சத்தியமூர்த்தி - News View

Breaking

Post Top Ad

Monday, May 18, 2020

யாழில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான வீதி விபத்துக்கள் - வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ் குடாநாட்டில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான வீதி விபத்துக்கள் மீண்டும் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வைத்தியசாலையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து த.சத்தியமூர்த்தி கருத்து தெரிவிக்கையில் குறிப்பாக உந்துருளியில் பயணம் செய்யும் இளைஞர்கள் கடுமையான வீதி விபத்துக்கு உள்ளாகி அவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒரு சிலரை காப்பாற்றவும் முடியாது.

அவர்கள் கடுமையான தலை காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே குறிப்பாக உந்துருளியினை பாவிக்கும் இளைஞர்கள் நகர்ப்புறங்களில் வண்டியை மெதுவாக செலுத்த வேண்டும். மாலை, இரவு நேரங்களில் வேகமாகச் செலுத்துவதில் தவிர்த்துக் கொள்ளுமாறு இளைஞர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன். 

வீதி விபத்து ஏற்பட்டால் சில சமயங்களில் உயிரை காப்பாற்ற கூட முடியாமல் வைத்தியர்களுக்கு போகின்றது. ஆகவே இது ஒரு துரதிருஷ்டவசமான நிலை. எங்கள் பகுதியில் கொரோனா தொற்றினால் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் வீதி விபத்துக்களினால் இந்தக் காலப்பகுதியில் சிலர் இறந்து விட்டார்கள்.

எதிர்வரும் நாட்களிலும் இவ்வாறான நிலை ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மாத்திரமல்ல மோட்டார்சைக்கிளினை வாங்கி வழங்கும் பெற்றோர்களும் இளைஞர்களை அல்லது அவர்களுடைய பிள்ளைகளை மிக மிக அவதானமாக செலுத்துமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள்.

குறிப்பாக அவர்கள் அளவுக்கு அதிகமான வேகத்தில் மோட்டார் சைக்கிளில் செலுத்துவது மிகவும் ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றது. ஆகவே அவர்கள் வேகத்தினை தனித்து மோட்டார் சைக்கிள் செலுத்துவதற்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக தற்பொழுது பாவனையில் இருக்கின்ற மோட்டார் சைக்கிள்கள் மிக வேகத்தில் இலக்கினை அடையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது பாவனைக்கு வருகின்ற மோட்டார் சைக்கிள் ஒவ்வொன்றும் அதன் வேகத்தின் அளவு கூடிக்கொண்டே செல்கின்றது. தற்பொழுது பாவனையில் உள்ள மோட்டார் சைக்கிள்கள் 100 கிலோமீட்டர் 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் இதன் ஆபத்து என்று தெரியாமல் அதிக வேகத்தில் ஓடி தங்களுடைய உயிர்களை தாங்களாகவே மாய்த்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு குடும்பப் பொறுப்பு உள்ளது இவர்களுடைய எதிர்காலம் எங்கே செல்கின்றது.

எனவே பெற்றோர்கள் தங்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக கொண்டு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுப்பதில் கொஞ்சம் கண்டிப்பான தன்மையினை மேற்கொள்ள வேண்டும் என வைத்திய பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad