சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட புகையிரத புதிய என்ஜின் தொகுதிகள் பரீட்சார்த்தம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 6, 2020

சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட புகையிரத புதிய என்ஜின் தொகுதிகள் பரீட்சார்த்தம்

சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட புகையிரதத்தின் புதிய என்ஜின் தொகுதிகளின் பரீட்சார்த்த நடவடிக்கைகள் இன்று (06) இரத்மலானை புகையிரத நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

மின்சக்தி, வலுசக்தி மற்றும் போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பங்கேற்புடன் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதோடு, இன்றையதினம் இப்பரீட்சார்த்த சேவையானது இரத்மலானையிலிருந்து பெலியத்த புகையிரத நிலையம் வரை இடம்பெற்றது.

எஞ்சியுள்ள புதிய என்ஜின் தொகுதிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக தற்போது போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், அரசாங்கத்தினால் பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதும், தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 09 என்ஜின் தொகுதிகளை பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்துமாறு, புகையிரத திணைக்களத்திற்கு, அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது 18,000 மில்லியன் ரூபா செலவில் புதிய என்ஜின் தொகுதிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் இன்னும் இரண்டு சொகுசு புகையிரத தொகுதிகள் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளன.

இப்புகையிரத தொகுதிகள் அனைத்தும் குளிரூட்டப்பட்ட ஒரு குறிப்பிட்ட பெட்டிகளை மாத்திரம் கொண்ட சொகுசு வசதிகளுடன் கூடியதாகும்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், இலங்கை புகையிரத சேவையை இலாபகரமானதாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம். இதன் காரணமாக பொதுமக்களை கவரும் வகையில் விரைவானதும், வசதியானதுமான புகையிரதத்தை போக்குவரத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad