"சமூகப் பின்புலத்தை இணைத்தே இஸ்லாம் கடமைகளை விதித்தது" - முன்னாள் ஆளுநர் அஷாத் சாலி! - News View

About Us

About Us

Breaking

Saturday, May 23, 2020

"சமூகப் பின்புலத்தை இணைத்தே இஸ்லாம் கடமைகளை விதித்தது" - முன்னாள் ஆளுநர் அஷாத் சாலி!

புனித ரமழான் தந்த பயிற்சியில் கூட்டுப் பொறுப்பு, சமூக உணர்வுகளுடன் இப்பெருநாளைக் கொண்டாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது, "இஸ்லாத்தின் உயரிய பார்வைகளை சரியாகப் புரிந்து செயற்படின், பல பிரச்சினைளுக்கு இலகுவாகத் தீர்வு கிடைக்கும். கடமைகள் அனைத்திலும் இஸ்லாம் சமூகப் பின்புலத்தையே பிணைத்துள்ளது. ஏழை, எளியோரின் பசி, பட்டினி, அன்றாட, அடிப்படை தேவைகளை உணர்வதற்கே புனித நோன்பும் எம்மீது கடமையாக்கப்பட்டது. இவற்றை உணர்ந்த மறுகணம் சமூகத்திலுள்ளோரின் தேவைகள் முறையாகப் பூர்த்தி செய்யப்படல் அவசியம்.

இதற்காகத்தான் "ஈதுல் பித்ர்" - "ஈகைப் பெருநாள்" என, இப்பெருநாள் பெயர் பெற்றது. ஸகாத், ஸதகா போன்ற கடமைகளும், சமூகத்திலுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு இடைவெளிகளை இல்லாதொழிப்பதையே வலியுறுத்துகிறது. இவ்விடயத்தில் இஸ்லாமிய அமைப்புக்கள் இனிமேலாவது கவனம் செலுத்துதல் அவசியம். 

அதுமட்டுமன்றி அரசியல்வாதிகள், செல்வந்தர்கள், ஆர்வமுள்ளோரை ஒன்றிணைத்து, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இக்கூட்டுக் கடமைகளை அமுல்படுத்தின், 'மாளிகாவத்தை' போன்ற சோக சம்பவங்களை இனிமேலாவது தவிர்க்க முடியும். 

அடிப்படைத் தேவைகளுக்காகவே இவ்வாறு மக்கள் உயிரிழக்கையில், அடிப்படை உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தேவைகளும் இன்று எழுந்துள்ளன. அரசியல் ரீதியான ஓரங்கட்டல்கள் முஸ்லிம்களின் மத உணர்வு, உரிமைகளிலும் கை வைக்குமளவுக்கு ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. இவ்விடயத்தைக் கண்டுகொள்ளாத அரசின் போக்கினால், முஸ்லிம்கள் பெரும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

இறுதிக் கிரியைகளையே கொச்சைப்படுத்தும் இந்த அரசு, வேறெந்தத் தேவைகளை தரப்போகின்றது? என்பதே இன்றைய ஆச்சர்யங்களாக உள்ளன. 

எனினும், இவற்றை வென்றெடுக்கும் வரை நிதானமிழக்காது செயற்பட வேண்டும். ஒருவருக்கொருவர் உரையாடல், பழகுதல் விடயங்களில் இடைவெளி பேணி, ஊரடங்குச் சட்டம், "மாஸ்க்" (முகக் கவசம்) அணிதல் உள்ளிட்ட அரசின் உத்தரவுகளையும் மதித்து நடப்பது அவசியம்.

இன்று பெருநாளைக் கொண்டாடும் அனைவரும், எமக்கெதிரான சோதனைகளிலிருந்து விடுபட அல்லாஹ்வைப் பிரார்த்தியுங்கள்."

-"ஈத் முபாரக்"-

No comments:

Post a Comment