வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 31, 2020

வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்

வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்காவிட்டால், எதிர்காலத்தில் கிழக்கிலே முஸ்லிம் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

கிழக்கில் தொல்லியல் திணைக்களம் தொடர்பாக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட செயலணியைக் கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் ஊடகங்களுக்கு நேற்று (சனிக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கிழக்கிலே தமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமிப்பதற்காகவே தொல்லியல் திணைக்கள அனுசரனையுடன் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இது கிழக்கில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களிலே கிழக்கு மாகாணத்திலே சில இனவாத முஸ்லிம் தலைவர்களின் செயற்பாட்டின் காரணமாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே பாரிய விரிசல் ஏற்பட்டு, இதனால் பல கசப்பான சம்பவங்கள் நடந்தேறின.

ஏப்ரல் குண்டுத் தாக்குதலின் பின்னராவது முஸ்லிம் அப்பாவி மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும்கூட தொல்லியல் என்ற போர்வையில் சிங்கள பௌத்தமயமாக்கல் என்ற தூர நோக்கு சிந்தனையுடன் சிங்கள தேசம் செயற்பட்டுள்ளது.

சிங்கள மக்களை மையப்படுத்திதான் இனி திட்டங்களை சிங்கள அரசு மேற்கொள்ளுமே தவிர முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான தனி திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது

எனவே இனியாவது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் சரியானது என விளங்கிக்கொண்டு முஸ்லிம் மக்கள், புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள், வடக்கு கிழக்கை இணைப்பதற்கும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஸைகளை நிறைவேற்றுவதற்கும் இணங்க வேண்டும்.

இதற்கு முரணாக செயற்பட்டால் எதிர்காலத்தில் கிழக்கிலே தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் மக்களின் இருப்பும் கேள்விக்குறியாகும்” என மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment