எமது நினைவேந்தும் அடிப்படை உரிமையை பறிக்க எவரும் அருகதையற்றவர்கள் - பொறியியலாளர் சண்.குகவரதன் - News View

Breaking

Post Top Ad

Sunday, May 17, 2020

எமது நினைவேந்தும் அடிப்படை உரிமையை பறிக்க எவரும் அருகதையற்றவர்கள் - பொறியியலாளர் சண்.குகவரதன்

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அவலங்கள் உட்பட அசாதாரண நிலைமைகளில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூருவதற்கு அனைவருக்கும் உரித்துண்டு. ஆகவே நினைவேந்தல் நிகழ்வுகளை தடுப்பதற்கு எவருக்கும் அருகை கிடையாதென மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான பொறியியலாளர் சண்.குகவரதன் வலியுறுத்தியுள்ளார்.

பாரிய துன்பியல் நிகழ்வுகளை கொண்ட கொண்ட முள்ளிவாய்க்கால் அவலத்தின் 11ஆவது நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2009ஆம் ஆண்டின் இறுதிப்போரில் முள்ளிவாய்க்காலில் மிகப்பெரும் அவலம் நடைபெற்றது என்பதை யாரும் மறைக்க முடியாது. மறுக்கவும் முடியாது. அதன்போது ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் நீத்துள்ளார்கள். அதுமட்டுமன்றி மூன்று தசாப்த விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்கள் பறிகொடுத்த உயிர்களின் எண்ணிக்கை ஏராளம்.

அவர்களின் ஆத்மா சாந்திக்காக போர் மௌனிக்கப்பட்ட தினமாக அறிவிக்கப்பட்ட மே 18 இல் நினைவேந்தலை செய்வது கடந்த ஒருதசாப்தமாக முன்னெடுக்கப்படுகின்றது. தமது சொந்தங்களை பறிகொடுத்தவர்கள் அவர்களை நினைவுகூர்ந்து தமது மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான ஒரு நாளாகவும் இது அமைகின்றது.

அவ்வாறிருக்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டப்படுத்துவதை மையப்படுத்தி நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பொலிஸார் தொடர்ச்சியாக முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது. அதுமட்டுமன்றி முல்லைத்தீவிலும் பொலிஸார் மற்றும் படையினரின் கெடுபிடிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

எது எவ்வாறாயினும், தமிழர்களும் இந்த நாட்டின் மக்களே. அவர்களுக்கு தமது பறிகொடுத்த சொந்தங்களுக்காக அஞ்சலி செலுத்துவதற்கு பூரண சுதந்திரமுள்ளது. இந்த நாட்டில் கார்த்திகை வீரர்கள் தினம், உயிரிழந்த படையினருக்கான அஞ்சலி தினம் ஆகியன முன்னெடுக்கப்படுகின்றன. அத்தினங்களில் பெரும்பான்மை மக்கள் ஒன்று கூடி அஞ்சிலிப்பதற்கு இடமளிக்கப்படுகின்றது.

அவ்வாறு இருக்கையில் தமிழ் மக்களுக்கு மட்டும் நினைவேந்தல் செய்வதற்கான உரிமையை எவ்வாறு தடுக்க முடியும். அவர்களுக்குள்ள அந்த அடிப்படை உரித்தை யாரும் தட்டிப்பறிக்க முடியாது என்றுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad