தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மஹிந்தவிடம் வழங்கிய ஆவணம் தொடர்பாக சந்தேகம் எழுகிறது - முன்னாள் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 6, 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மஹிந்தவிடம் வழங்கிய ஆவணம் தொடர்பாக சந்தேகம் எழுகிறது - முன்னாள் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கிய ஆவணம் தொடர்பாக சந்தேகம் எழுவதாக முன்னாள் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை அரசாங்கத்துடனான மறைமுகமான ஒப்பந்தமொன்றுக்கு கூட்டமைப்பு தயாராகி விட்டதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்பும் இதே மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தது. அந்த 22 சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாத நிலையிலும் குறித்த கூட்டத்திற்கு முதலில் போவதற்கு மறுத்த நிலையிலும் பின்னர் 11 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று சந்தித்திருக்கின்றார்கள்.

அதுமாத்திரமின்றி கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாத நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரையாற்றுவதற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

பின்னர், தமது கோரிக்கைகள் என்று குறிப்பிடப்பட்ட ஒரு கோப்பை பிரதமரிடம் வழங்கிய காட்சியையும் காண முடிந்தது. வழங்கப்பட்ட கோப்பில் அடங்கிய விடயம் என்னவென்பது இன்று வரை மக்களுக்குத் தெரியாததாகவே இருக்கின்றது.

2014 ஆம் ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா வழங்கிய கடிதத்தை சுமந்திரன் வழங்கிய நிலையில், அந்தக் கடிதத்தில் என்ன இருக்கின்றது என நாங்கள் அப்போது கேட்டும் இன்றுவரை என்ன இருக்கின்றது என்றே தெரியாமல் இருக்கின்றது.

அது அவ்வாறிருக்க நேற்று வழங்கப்பட்ட கடிதத்தில் அரசியல் கைதிகளுடைய விடுதலை, புதிய அரசியல் யாப்பு போன்ற விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் என முண்டுகொடுத்த, ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய முடியாத கூட்டமைப்பு இப்போது 5 வருடங்கள் கடந்து மீண்டும் தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பாகப் பேசுகின்றார்கள்.

இப்போது எங்கள் மத்தியில் எழுகின்ற சந்தேகம் இவர்கள் இந்த அரசுடன் ஒரு மறைமுக ஒப்பந்தத்திற்கு தயாராகி விட்டார்களா? அதுவும் கொரோனா நெருக்குவாரத்தில் தேர்தலை நடத்துவதற்கு கூட்டமைப்பினுடைய அனுசரணை அரசாங்கத்துக்குத் தேவையாகவுள்ளது.

அரசாங்கத்தினுடைய சலுகைகளும், வசதி வாய்ப்புகளும் கூட்டமைப்புக்குத் தேவையாக இருக்கின்றது என்ற வகையில் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு விட்டார்களா என வலுவான சந்தேகம் ஒன்று எழுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment