”52 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமென்றால் ஏன் ஒன்றரை இலட்சம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது” - News View

Breaking

Post Top Ad

Monday, May 18, 2020

”52 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமென்றால் ஏன் ஒன்றரை இலட்சம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது”

52 இலட்சம் குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரணத்தை அரசாங்கம் வழங்குவதாக கூறுகின்றது. அப்படியானால் தோட்டத் தொழிலாளர்களாக இருக்கும் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு ஏன் அந்த நிவாரணத்தை வழங்க முடியாதுள்ளது? என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள், அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று நுவரெலியா கன்ட்ரி ஹவுஸ் விருந்தகத்தில் இடம்பெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் பல்வேறு நிவாரணங்களை வழங்கினாலும், அவை எங்களுடைய தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையாக கிடைப்பதில்லை. நாட்டில் அனைத்து துறைகலும் முடக்கப்பட்டு இருக்கின்ற இந்த சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமே தங்களுடைய உயிரையும் பணயம் வைத்து அந்நிய செலவாணியை பெற்றுக்கொடுப்பதற்காக தங்களுடைய தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதன்மூலமாக நாட்டிற்கு அதிகமான அந்நிய செலவாணி கிடைக்கப் பெறுகின்றது. அண்மைய செய்திகளின் அடிப்படையில் தேயிலை உலக சந்தையில் வெகுவாக அதிகரித்து இருக்கின்றது. ஆனால், அந்த விலை அதிகரிப்பின் உடைய பிரதிபலன் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை.

அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஒதுக்குவதாகவே நாங்கள் கருதுகின்றோம். அதேபோல நாட்டில் பொருட்களின் விலைகளும் வெகுவாக அதிகரித்து இருக்கின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களை மறந்து செயல்படுகின்றது. 7000 இளைஞர், யுவதிகள் மலையகத்திற்கு வருகை தந்திருக்கின்றார்கள் என்பது வெறும் வதந்தியே. இதனை பாதுகாப்புத் தரப்பும் வதந்தியென உறுதி செய்துள்ளது. ஆனாலும், கொழும்பில் இருக்கின்ற இளைஞர், யுவதிகளை முறையாக இங்கு அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

அதேநேரம் அந்த இளைஞர், யுவதிகளுக்கு வருமானத்திற்கான வழிவகைகளையும் அரசாங்கம் செய்து கொடுக்க முன்வர வேண்டும். நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் எங்களுடைய அணி வழமை போலவே பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றிபெறும். அத்துடன், அடுத்த அரசாங்கத்தை சஜித் பிரேமதாச தலைமையில் நாங்கள் அமைப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஹட்டன் சுழற்சி நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad