நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேருக்கு எதிராக வழக்குத் தொடர அரசாங்கம் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 6, 2020

நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேருக்கு எதிராக வழக்குத் தொடர அரசாங்கம் தீர்மானம்

(ஆர்.யசி) 

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட அரச உத்தியோகபூர்வ இல்லங்களை இன்னமும் பயன்படுத்திவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேருக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை வழக்குத் தாக்கல் செய்ய பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. 

எனினும் அரச உத்தியோகபூர்வ இல்லத்தை மீண்டும் ஒப்படைக்க தாம் தயராக இருப்பதாகவும் கொவிட் -19 வைரஸ் தொற்று நோய் காரணமாக அரச காரியாலயங்கள் மூடப்பட்டுள்ள காரணத்தினால் தம்மால் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாதுள்ளதாக குறித்த உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். 

நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுக்களையும், இராஜாங்க அமைச்சுக்களையும் வகித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை இன்னமும் மீள ஒப்படைக்காத காரணத்தினால் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பொறுப்புக்களை வகித்த உறுப்பினர்கள் உள்ளிட்ட 22 பேருக்கு எதிராக வழக்குத் தொடர பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது. 

அரசாங்கத்தினால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டும் இன்னமும் குறித்த 22 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்காததை அடுத்தே இவ்வாறு வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

இதில் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹகீமிற்கு வழங்கப்பட்ட பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இல்லம், அதே பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவிற்கு வழங்கப்பட்ட இல்லம், முன்னாள் அமைச்சர் நளின் பண்டாரவிற்கு ஹெக்டர் கொபெகடுவ மாவத்தையில் வழங்கப்பட்ட இல்லம், பிரதி அமைச்சர் எட்வர்ட் குணசேகரவிற்கும் அதே பிரதேசத்தில் வழங்கப்பட்ட இல்லம், முன்னாள் பிரதி அமைச்சர் துணேஷ் கங்கந்தவிற்கு லோரிஸ் தொடர்மாடி தொகுதியில் வழங்கப்பட்ட இல்லம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் செனவிரத்ன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ஆகியோருக்கு கெப்பட்டிப்பொல வீதியில் வழங்கப்பட்ட இல்லம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி அளவதுவளவிற்குவிற்கு வழங்கப்பட்ட இல்லம் மற்றும் லோரிஸ் தொடர்மாடி தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக அபேவர்தன, சம்பிகா பிரேமதாச, வடிவேல் சுரேஷ், எச்.எம்.எம் ஹரீஸ், பைசல் காசீம் ஆகியோருக்கு வழங்கப்பட்ட அரச உத்தியோகபூர்வ இல்லம், கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் சபைகளின் பிரதித் தலைவராக கடமையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அமைச்சர்களான ரவீந்திர சமரவீர, அப்துல் ஹலீம் ஆகியோருக்கு வழங்கப்பட்ட அரச உத்தியோகபூர்வ இல்லம் ஆகியனவும் அதேபோல் நல்லாட்சி அரசாங்கத்தில் இடை நடுவே அரசாங்கத்தை விட்டு வெளியேறிய முன்னாள் அமைச்சர்களான பைசல் முஸ்தபா, சந்திம வீரக்கொடி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் துலிப் விஜயசேகர, இராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க ஆகியோருக்கு வழங்கப்பட்ட அரச உத்தியோகபூர்வ இல்லமும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வசம் உள்ளதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்த பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மாகாண திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஸ்பகுமாரவிற்கு வழங்கப்பட்ட அரச உத்தியோகபூர்வ இல்லத்தையும் இன்னமும் கையளிக்காத நிலையில், மூன்று மாத காலத்தில் அவர்கள் அரச உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் என்ற இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்ட போதிலும் குறித்த காலம் கடந்தும் அவர்கள் அரச உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்தி வருகின்ற காரணத்தினால் பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு மூலமாக வழக்குத் தொடர தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 11 ஆம் திகதி இந்த வழக்கு தொடரப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். 

எனினும் இந்த செயற்பாடு வெறுமனே அரசியல் ரீதியில் இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் பழிவாங்கல் என குற்றம் சுமத்தும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உத்தியோகபூர்வ இல்லத்தை விடுவிக்கக்கோரி எந்தவித கடிதமும் வரவில்லை எனவும் கூறுகின்றனர். 

இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறுகையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஒரு வாரகாலத்தில் கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினைகள் ஏற்பட்டதை அடுத்து உடனடியாக மாற்று நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்க முடியாது போய்விட்டது. 

அத்துடன் ஒரு வாரத்தின் பின்னர் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் அரச அலுவலகங்கள் அனைத்துமே மூடப்பட்டுள்ளது. நாம் பெற்றுக்கொண்ட அரச உத்தியோகபூர்வ இல்லத்தை முறைப்படி அவர்களிடம் கையளிக்க நாம் தயராகவே உள்ளோம். நிலைமைகள் சரியானவுடன் நாமே எமது அரச உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்கிவிடுவோம் என்றார். 

No comments:

Post a Comment