ஜூன் 20 ஆம் திகதிக்குப் பின்னரும் தேர்தலை பிற்போட வேண்டிய நிலை ஏற்படலாம் - கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 5, 2020

ஜூன் 20 ஆம் திகதிக்குப் பின்னரும் தேர்தலை பிற்போட வேண்டிய நிலை ஏற்படலாம் - கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

(நா.தனுஜா) 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்தமை மற்றும் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தமை ஆகியவற்றை எதிர்த்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். 

இது குறித்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது அரசியலமைப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி எட்டாவது பாராளுமன்றத்தைக் கலைத்ததுடன், ஏப்ரல் 25 ஆம் திகதி 9 ஆவது பாராளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தினமாகவும் அறிவிக்கப்பட்டது. 

இது உலகலாவிய ரீதியில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த நிலையிலேயே இடம்பெற்றது. இதனால் தேர்தல் பிற்போடப்பட்டாலும், எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது. 

எனினும் அதற்கு முன்னர் தேர்தல் திகதி குறித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நடைமுறையில் இருக்கையில், புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முடியாது. அதுமாத்திரமன்றி தற்போதைய நெருக்கடி நிலையில் நியாயமானதும், சுதந்திரமானதுமான தேர்தலொன்றை நடத்துவது சாத்தியமற்றதாகும். 

தேர்தல் பிரசாரம், வாக்களிப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் சமூக இடைவெளியைப் பேணுவது கடினம் என்பதுடன், இது மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையலாம். எனவே ஜூன் 20 ஆம் திகதிக்குப் பின்னரும் தேர்தலைப் பிற்போட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

No comments:

Post a Comment