கலைந்த பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்ட வேண்டிய அவசியமில்லை : முன்னாள் நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Saturday, April 4, 2020

கலைந்த பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்ட வேண்டிய அவசியமில்லை : முன்னாள் நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ

(ஆர்.ராம்) 

பாராளுமன்றத் தேர்தலை நடத்தவதற்கான காலத்தினை “அவசியக் கோட்பாட்டின்” அடிப்படையில் தீர்மானிக்க முடியும். ஆனால் கலைந்த பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்ட வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் நீதி அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். 

பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்டுதல் மற்றும் தேர்தல் திகதியை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் இவ்விடயங்கள் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்போது எட்டாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஒன்பதாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்டவேண்டும் என்ற வலியுறுத்தப்படுகின்றது. 

அவ்வாறிருக்க, பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்டுவதாக இருந்தால் அரசியலமைப்பின் 155ஆவது சரத்திற்கு அமைவாக ஜனாதிபதிக்கு மீண்டும் பாராளுமன்றத்தினை கூட்டுவதற்கு அதிகாரங்கள் உள்ளன. 

அதாவது, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டே பாராளுமன்றத்தினைக் கூட்டமுடியும். ஆனால் நாட்டில் போர்ச்சூழல் காணப்படவில்லை. தொற்று நோய் சார்ந்த பிரச்சினை தான் உள்ளது. 

ஆகவே அவசர ஒழுங்குவதிகள் தயாரிக்கப்படாத நிலையில் தொற்று நோய்ச் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏதுநிலைமைகள் காணப்படுகின்றன. 

அதேநேரம், சட்ட விடயங்களுக்கு அப்பால் பாராளுமன்றத்தினை கூட்டினால் அங்கு இந்த பிரச்சினைக்கு தீர்வினைப் பெறுவதற்கான முறைமை என்னவாக இருக்கின்றது. அவ்வாறான முறைமையொன்றோ அல்லது பொறிமுறையோ இல்லாத நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தினைக் கூட்டி பிரச்சினைகளை வளர்க்க வேண்டிய அவசிமில்லை. 

அதேநேரம், தற்போதைய சூழலில் பொதுத் தேர்தலை நடத்த முடியாத சூழல் நிலவுகின்றமை வெளிப்படையாகின்றது. அவ்வாறான நிலையில் அதனை குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைப்பதே சிறந்ததாகவும். அது பற்றிய உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தினைக் கோருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதியைக் கோரியுள்ளார். 

பொதுத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு சட்ட ரீதியான ஏற்பாடுகள் காணப்படாது விட்டாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை அடிப்படையாகவும் உலகத்தில் கடந்த காலத்தில் அதாவது எபோலா போன்ற நோய்களின் தீவிரத்தன்மையின்போது அந்நாடுகள் எடுத்த தீர்மானங்களை முன்னுதாரணமாகக் கொண்டு முடிவுகளை எடுக்க முடியும். 

குறிப்பாக, அவசியக் கோட்பாட்டின் அடிப்படையில் பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான சகல அதிகாரங்களும் உள்ளன. தேர்தல் போட்டிக்கு அப்பால் பொதுமக்களின் உயிர்ப்பாதுகாப்பு முக்கியமானது என்றார்.

No comments:

Post a Comment