போலியான, இனவாத செய்திகளை பரப்பும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் நடவடிக்கை அவசியம் : ஊடக அமைப்புக்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

போலியான, இனவாத செய்திகளை பரப்பும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் நடவடிக்கை அவசியம் : ஊடக அமைப்புக்கள்

(நா.தனுஜா) 

சமூகவலைத்தளங்களைப் போன்று, பெருமளவானோரைச் சென்றடைகின்ற தொலைக்காட்சி ஊடகத்திலும் ஒளிபரப்பப்படும் பொய்யான மற்றும் இனவாத செய்திகள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து வலியுறுத்தியிருக்கின்றன. 

தமிழ் ஊடக அமையம், சுதந்திர ஊடக செயற்பாடு, ஊடகவியலாளர் தொழிற்சங்க சம்மேளனம், இளைஞர் ஊடக அமைப்பு, இலங்கை ஊடகவியலாளர்கள் அமைப்பு, இலங்கை முஸ்லிம் ஊடக அமையம் மற்றும் சமூகவலைத்தள செயற்பாட்டாளர்கள் அமைப்பு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது சமூகவலைத்தளங்களின் ஊடாகப் பொய்யான மற்றும் துவேஷத்தை வெளிப்படுத்தும் செய்திகளை, கருத்துக்களை வெளிப்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எனக்குறிப்பிட்டு கடந்த முதலாம் திகதி பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கை எமக்கு விசனமளிப்பதாக அமைந்துள்ளது. 

கருத்துக்களை வெளிப்படுத்துவதில் சில எல்லைகள் காணப்படினும், அது ஓர் அடிப்படை உரிமை என்ற வகையில் இத்தகைய விடயங்களில் மேலும் பொறுப்புணர்வோடும், விரிவான சிந்தனையுடனும் செயற்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

தற்போதைய நெருக்கடி நிலையின் மத்தியில் பொய்யான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் பரவுவதால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றே நாம் நம்புகின்றோம். எனவே அத்தகைய செய்திகள் வெளியாவதைத் தடுப்பதுடன், அதற்காக மேற்கொள்ளதக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக இருக்கின்றோம். 

அதேவேளை பொய்யான செய்திகள் பரப்பப்படும் சந்தர்ப்பத்தில் அந்நபர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதே சிறந்ததாகும். அதன்மூலம் மக்களின் தகவலறியும் உரிமையும் பாதுகாக்கப்படும். 

அதேபோன்று சமூகவலைத்தளங்களில் மாத்திரமன்றி, பெருமளவானோரைச் சென்றடைகின்ற தொலைக்காட்சி ஊடகத்திலும் ஒளிபரப்பப்படும் பொய்யான மற்றும் இனவாத செய்திகள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

மேலும் இத்தகைய முக்கியமான அறிவித்தல்கள் நாட்டின் அனைத்து அரச கரும மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டியது அவசியமாகும்.

No comments:

Post a Comment