அம்பாறை மாவட்ட பாஸ் நடைமுறையில் விவசாயிகள் அசமந்தப்போக்கு - அதிகாரிகள் சிரமம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

அம்பாறை மாவட்ட பாஸ் நடைமுறையில் விவசாயிகள் அசமந்தப்போக்கு - அதிகாரிகள் சிரமம்

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும் விவசாய நிலப்பரப்பைக்கொண்ட சம்மாந்துறை நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வயல்களுக்கு விவசாய நடவடிக்கைக்காகச்செல்லும் விவசாயிகள் பாஸ் நடைமுறையைப் பின்பற்றாமல் அசமந்தப்போக்கினைக் கடைப்பிடிக்கின்றனர். குறிப்பாக, காரைதீவு, மாவடிப்பள்ளி, சம்மாந்துறை, நற்பிட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பு உள்ளிட்ட பிரதேச விவசாயிகள் தத்தமது விவசாய நிலங்களுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர்.

இதனால் பாதுகாப்புத்தரப்பினால் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாஸ் நடைமுறையை முறையாக அமுல்படுத்தித் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரங்குச்சட்டத்தை அமுல்படுத்தியுள்ள போதிலும், விவசாய மற்றும் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட பல சேவைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதிலொரு சில சேவைகளுக்கு பாஸ் நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இதே வேளை, விவசாயிகள் அன்றாட விவசாய நடவடிக்கைகளுக்காக எதுவித தடையுமின்றிச்செல்ல முடியுமென அரசாங்கம் சுற்று நிரூபம் மூலம் அறிவுத்துள்ள போதிலும், போலி விவசாயிகள் பலரும் இந்நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதனால், பாஸ் நடைமுறையை அமுல்படுத்தவுள்ளதாக பாதுகாப்புத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இருந்த போதிலும், சவளக்கடை கமநல சேவை கேந்திர நிலையத்தின் கீழுள்ள வயல் பிரதேசத்திற்குச் செல்லும் விவசாயிகள் சவளக்கடை இராணுவச்சோதனை சாவடியில் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும், தடுத்து நிறுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது வயல் விதைப்பு மற்றும் களை நாசினி தெளிக்கும் வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில், இவ்வாறான செயற்பாடு விவசாய நடவடிக்கையில் பின்னடைவை ஏற்படுத்துமெனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆகையால், இது விடயத்தில் மாவட்ட அரசாங்க அதிபர், நாவிதன்வெளி பிரதேச செயலாளர், அம்பாரை மாவட்ட விவசாயத் திணைக்கள அதிகாரிகள், சவளக்கடை விவசாய கேந்திர நிலைய பெரும்போக உத்தியோகத்தர்கள் துரித நடவடிக்கை மேற்கொண்டு பாஸ் நடைமுறையையாவது ஏற்படுத்தி விவசாய நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான அனுமதியைப் பெற்றுத்தருமாறு பிரதேச விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

No comments:

Post a Comment