நாடளாவிய ரீதியில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

நாடளாவிய ரீதியில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நடவடிக்கை

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

நாடளாவிய ரீதியில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதற்காக பிரதேசத்தில் இருக்கும் பிரதான மஸ்ஜிதை நிவாரண உதவிகளை சேர்க்கும் நிலையமாக அறிமுகம் செய்யப்படும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாரக் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு 24.03.2020 (செவ்வாய்க்கிழமை) ஜம்இய்யாவின் தலைமையகத்தில் சிவில் மற்றும் சமூக தலைமைகள் கூடிய கூட்டத்தில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கான பொறிமுறையை ஜம்இய்யா அவசரமாக அறிமுகம் செய்திருக்கிறது.

அதன் அடிப்படையில் சகல மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகள் செயலாற்றும் படி ஜம்இய்யா வேண்டிக்கொள்கிறது.

உங்களது பிரதேசத்தில் உள்ள மஸ்ஜித் சம்மேளனம் அல்லது மஸ்ஜித் நிருவாகிகளுடன் இணைந்து அங்குள்ள ஒரு பிரதான மஸ்ஜிதை இனங்கண்டு அதனை நிவாரண உதவிகளை சேர்க்கும் ஒரு மத்திய நிலையமாக அறிமுகம் செய்ய வேண்டும். 

இதற்காக வேண்டி ஜம்இய்யா சார்பாக 5 பேரும் மஸ்ஜித் சம்மேளனம் அல்லது பிரதான மஸ்ஜித் சார்பாக 5 பேரைக் கொண்ட ஒரு குழுவை நியமனம் செய்ய வேண்டும். எண்ணிக்கையை தேவைக்கேற்ப வைத்துக் கொள்ளலாம். 

அத்துடன் ஊரடங்குச் சட்டத்தின் போது சென்று வர இருவர் அல்லது மூவருக்கு அனுமதியையும் ஒரு வாகனத்திற்குரிய (மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உற்பட) அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும். 

தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள மத்திய நிலையத்திற்கான ஒரு தொலைபேசி இலக்கத்தை (hotline) அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். 

மேலும் தம்மிடம் மேலதிகமாக இருக்கின்ற கீழ்வரும் பொருட்களை பிரதேசத்தின் மத்திய நிலையத்திற்கு ஒப்படைக்குமாறு, அந்தந்தப் பிரதேசத்திலுள்ள சகல மக்களிடமும் வேண்டிக் கொள்ள வேண்டும். அது தம்மிடம் இருக்கும் சிறிய அளவிலான (உம்-250g) பொருளானாலும் சரியே. 

அதேபோன்று தம்மிடம் இருக்கும் மேலதிகப் பொருட்களை ஒப்படைக்க குறித்த தொலைபேசிக்கு அறிவிக்கும் படியும் அத்தியாவசியப் பொருட்கள் தேவையானவர், குறித்த தொலைபேசிக்கே அறிவிக்கும் படியும் மக்களை வேண்டிக் கொள்ள வேண்டும். 

மத்திய நிலையத்திலிருந்து பொருட்களை தேவையானவர்களுக்கு வழங்கும் போது, பொருத்தமானவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தேவைக்கேற்ற அளவு கொடுத்துதவவேண்டும். 

பொலிஸ் நிலையத்தில் அனுமதியை பெற்றுக் கொண்ட வாகனங்கள் மாத்திரம் பொருட்களை சேர்க்கவும் அல்லது தேவையானவர்களுக்கு உதவிகளை வழங்க சென்று வரவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேறு எவரும் அல்லது எந்த வாகனமும் அனுமதியின்றி செயற்படக்கூடாது. 

விசேடமாக மனிதாபிமான அடிப்படையில் செய்யப்படும் இவ்வுதவி இன, மத வேறுபாடின்றி சகலரையும் சென்றடைவதை உத்தரவாதப்படுத்திக் கொள்ள வேண்டும். 

மேலும் இந்நிவாரணப் பணிகளில் ஈடுபடும் போது தொண்டர்களின் எண்ணிக்கை அதிக அளவு இருப்பதை முற்றாகத் தவிர்த்துக் கொள்வதுடன் பொருட்களை சேகரிக்கும் போதும் அதனைப் பொதி செய்யும் போதும் மற்றும் அதனை விநியோகிக்கும் போதும் சுகாதார வழிமுறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும். 

இந்த சிறப்பான பணியை மேற்கொள்ள ஆலிம்கள், பள்ளி வாசல் நிர்வாகிகள் தனவந்தர்கள் மற்றும் ஊர் பிரதானிகள் யாவரும் ஒன்றிணைந்து செயற்படுத்த முன்வருமாறு ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது. 

அத்துடன் நிவாரண உதவியாக அரிசி, சீனி, பருப்பு, பால் மா, தேயிலை, கோதுமை மா, செமன் டின் ஆகிய பொருட்களே நிவாரண உதவியாக எதிர்பார்க்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad