திறைசேரியில் பணம் இல்லாதபோதிலும் சேவைகள் நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது - முஸ்லிம் பிரதேசங்கள் தங்கமாகவும், தமிழர் பிரதேசங்கள் தகரமாகவும் காட்சியளிக்கின்றன - News View

About Us

About Us

Breaking

Monday, March 2, 2020

திறைசேரியில் பணம் இல்லாதபோதிலும் சேவைகள் நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது - முஸ்லிம் பிரதேசங்கள் தங்கமாகவும், தமிழர் பிரதேசங்கள் தகரமாகவும் காட்சியளிக்கின்றன

நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சு மூலமாக கிழக்கு மாகாணத்தின் மூவினங்களையும் சேர்ந்த இளையோர்களுக்கு விரைவில் கணிசமான அரசாங்க தொழில் துறை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன என்று இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும், நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் விசேட இணைப்பாளருமான என். விஷ்ணுகாந்தன் தெரிவித்தார்.

தமிழர் ஊடக மையத்தின் தலைவர் ரி. தர்மேந்திராவின் ஏற்பாட்டில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த இளையோர்களை காரைதீவில் சந்தித்து பேசியபோது விஷ்ணுகாந்தன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவித்தவை வருமாறு, இந்நாட்டு மக்களின் குறிப்பாக இளையோர்களின் எதிர்பார்ப்புகளை எமது அரசாங்கம் வெகுசிறப்பாக நிறைவு செய்து வருகின்றது. திறைசேரியில் போதிய பணம் இல்லாதபோதிலும் மக்களுக்கான சேவைகள் நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டே வருகின்றன. அந்த வகையில் இளையோர்களுக்கு அபரமிதமான அளவில் அரசாங்க தொழில் துறை வாய்ப்புகளை விரைவாக வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

வருகின்ற நாட்களில் இல்லையேல் பாராளுமன்ற பொது தேர்தலுக்கு பிற்பாடு இவ்வேலை வாய்ப்புகள் நிச்சயம் வழங்கப்படும் என்று நாம் விசுவாசிக்கின்றோம். ஆனால் எமது மக்களுக்கு இடையில் ஒருவித குழப்பம், அல்லது மயக்கம் இருக்கின்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் அரசாங்க தொழில் துறை நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது என்று பிழையாக விளங்கி வைத்திருக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு இருக்க கூடிய மட்டுப்பாடுகளும், கட்டுப்பாடுகளும் ஏனைய தேர்தல்களுக்கு கிடையாது என்பதை இந்த இடத்தில் உங்கள் அனைவருக்கும் கூறி வைக்கின்றேன். எனவே இது குறித்து நீங்கள் அஞ்சவே தேவை இல்லை. 

நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சுக்கு நீங்கள் தொழில் வாய்ப்பு கோரி சமர்ப்பித்த விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டு இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவால் உறுதிப்படுத்தல் கடிதங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

அதற்கு அமைய நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சால் நிச்சயம் உங்கள் ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்க பெறுவது உறுதி ஆகும். ஒரு வேளை தேர்தலுக்கு பின்னர் வேறு அமைச்சர் பொறுப்பெடுத்தால்கூட உங்களுக்கான நியமனங்கள் கிடைக்க பெறும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.

இதில் என்னால் முடிந்த பங்களிப்புகள் அனைத்தையும் நான் நிச்சயம் வழங்குவேன். தமிழ் இளையோர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்குங்கள் என்று இராஜாங்க அமைச்சரை கோரி இருக்கின்றேன். 

அதாவுல்லா, ஹிஸ்புல்லா, ரவூப் ஹக்கீம் போன்ற முஸ்லிம் தலைவர்களுக்கு இருக்கின்ற இன உணர்வு தமிழ் தலைவர்கள் என்று சொல்லி கொள்பவர்களுக்கு நிச்சயமாக கிடையாது. அதனால்தான் முஸ்லிம் பிரதேசங்கள் தங்கமாகவும், தமிழர் பிரதேசங்கள் தகரமாகவும் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக காட்சி தந்த வண்ணம் உள்ளன.

இதற்காக நாம் முஸ்லிம் தலைவர்களை கோபிக்க முடியாது. ஏனென்றால் அவர்களின் மக்களுக்கான அரசியலை அவர்கள் மிக சரியாகவே செய்கின்றனர். நாம் முஸ்லிம் மக்கள் மீது பொறாமைப்படுவதிலும் எந்த அர்த்தமும் கிடையாது. போட்டி இருக்கலாம். பொறாமை இருக்க கூடாது. ஆக்கபூர்வமான வகையில், விவேகமான முறையில் தமிழர் அரசியல் எதிர்காலத்திலேனும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment