இலங்கையில் முஸ்லிம் தேசம் அமைக்கும் திட்டத்துடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயற்பட்டுகிறது - இன வன்முறைகளைத் தூண்டுவதற்கு பொதுபலசேனா பயங்கரவாத அமைப்புக்கு நோர்வே நிதி வழங்கியுள்ளது - News View

About Us

About Us

Breaking

Monday, March 2, 2020

இலங்கையில் முஸ்லிம் தேசம் அமைக்கும் திட்டத்துடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயற்பட்டுகிறது - இன வன்முறைகளைத் தூண்டுவதற்கு பொதுபலசேனா பயங்கரவாத அமைப்புக்கு நோர்வே நிதி வழங்கியுள்ளது

இலங்கையில் முஸ்லிம் தேசம் அமைக்கும் திட்டத்துடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயற்பட்டு வருவதாக முன்னாள் நீதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இதற்காக நான்கு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் இது தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை விஜேதாஸ ராஜபக்‌ஷவின் குற்றச்சாட்டு தொடர்பில் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் இவ்வாரம் பதில் வழங்க உலமா சபை திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே உலமா சபை தலைவரும் முக்கிய உறுப்பினர்களும் ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளதோடு வீணான குழப்பபத்தை ஏற்படுத்தும் இந்தக் குற்றச்சாட்டுக்கு உரிய வகையில் பதில் வழங்குவதாகவும் உலமா சபை முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.

கடிதம் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேவை ஏற்பட்டால் மீண்டும் உலமா சபை சார்பில் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை விஜேதாஸவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க அவசரப்படவில்லை எனவும் உரிய வகையில் பதில் கொடுக்கப்படும் எனவும் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்து சாட்சியமளித்துள்ள விஜேதாஸ ராஜபக்‌ஷ, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முஜீபுர் ரஹ்மான், அஸாத் சாலி போன்றோர் அடிப்படைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் மாவனல்லை சிலை உடைப்புடன் தொடர்புள்ளவர்களை விடுவிக்க அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் இங்கு கூறியுள்ளார்.

ஹலால் சான்றிதழ், முகத்திரை, ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்துதல் மற்றும் அரபு மொழி கற்பித்தல் என்பவற்றினூடாக இங்கு இஸ்லாமிய தேசம் உருவாக்க உலமா சபை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் பௌத்த அடிப்படைவாதத்தை விதைப்பதற்கும் அதனூடாக நாட்டில் இன வன்முறைகளைத் தூண்டுவதற்கும் பொதுபலசேனா பயங்கரவாத அமைப்புக்கு நோர்வே நிதி வழங்கியிருந்ததாகவும் அவர் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்

நல்லாட்சியில் தான் நீதியமைச்சராக இருந்த போது இது குறித்த தகவல்களை தேடி அறிந்து கொண்டதாகவும் குளியாபிட்டிய மற்றும் கூரகல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளை ஞானசார தலைமையிலான கடும்போக்குவாதிகள் முயன்ற போது அதனைத் தானே தனது அதிகாரத்தைக் கொண்டு முடக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விஜேதாஸ ராஜபக்‌ஷவின் குற்றச்சாட்டை பொதுபலசேனா மறுத்துள்ளதோடு இது தொடர்பில் விவாதம் நடத்த முன்வருமாறு அதன் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே கூறியுள்ளார்.

No comments:

Post a Comment