தகுதி பெற்ற பட்டதாரிகளுக்கு இன்று மாலைக்குள் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு - News View

Breaking

Post Top Ad

Monday, March 2, 2020

தகுதி பெற்ற பட்டதாரிகளுக்கு இன்று மாலைக்குள் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு

தகுதிபெற்ற 42,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் இன்று மாலைக்குள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது வேலையற்ற பட்டதாரிகளை தொழிலில் அமர்த்தும் செயற்திட்டத்தின்கீழ் தகுதி பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

தொழிலை எதிர்பார்ப்போர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பெற்றுக்கொள்ளப்பட்ட முதல் பட்டம் அல்லது அதற்கு நிகரான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட டிப்ளோமா பாடநெறியை 2019.12.31க்கு முன்னர் நிறைவு செய்திருக்க வேண்டும்.

70,000திற்கும் மேற்பட்ட தொழில் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 56,000 விண்ணப்பங்கள் சரியான மாதிரிகளுக்கமைய பூர்த்தி செய்யப்பட்டிருந்தன. அவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உட்பட பல நிறுவனங்களில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. பட்டம் அல்லது டிப்ளோமா சான்றிதழ் உட்பட அடிப்படைத் தகைமைகளை பெற்றிருந்தாலும் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை பூரணப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் நியமனத்திற்கு 42,000 விண்ணப்பதாரிகள் தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இலங்கை தபால் திணைக்களத்தின் ஸ்பீட் போஸ்ட் கூரியர் சேவை மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இன்று மாலைக்குள் தகுதிபெற்ற அனைத்து விண்ணதாரிகளுக்குமான நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. அனைத்து நியமனக் கடிதங்களுக்குமான விநியோகிப்பு பற்றுச் சீட்டினை தபால் திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நியமனத்திற்கு பொறுப்பானவராவார். நியமனம் பெற்ற மூன்று நாட்களுக்குள் தமக்குரிய பிரதேச செயலாளருக்கு அறிக்கையிடுதல் வேண்டும். நியமனக் கடிதம் கிடைத்து 07 நாட்களுக்குள் பயிற்சி நெறிக்கு சமூகம் தராதவிடத்து அந்நியமனம் இரத்து செய்யப்படும்.

ஒரு வருட பயிற்சிக் காலத்தில் ரூபா 20,000 கொடுப்பனவு வழங்கப்படும். பயிற்சிக் காலத்தின் பின்னர் ஓய்வூதியத்துடன்கூடிய அரச நிரந்திர சேவையில் உள்வாங்கப்படுவர். மாவட்ட ரீதியாக நியமனம் வழங்கப்படுவதுடன், முதல் நியமனம் பெற்ற மாவட்டத்தில் 05 வருடங்கள் சேவையாற்றுவது கட்டாயமானதாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad