ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல் உக்கிரம் - கூட்டணி உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வை ரணில் தரப்பு பகிஷ்கரிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 3, 2020

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல் உக்கிரம் - கூட்டணி உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வை ரணில் தரப்பு பகிஷ்கரிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பொது உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (02) இடம்பெற்றது. கொழும்பு தாமரைத் தடாகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இக்கூட்டணியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தலைவரோ, செயலாளரோ பங்கேற்கவில்லை. எனினும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலை இலக்குவைத்து ஐக்கிய மக்கள் சக்தி புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் கூட்டணியின் சின்னம் குறித்து எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. யானைச் சின்னத்தைப் பயன்படுத்துமாறு ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தாலும் சின்னத்தை மாற்றுவதில் சிக்கல்கள் உள்ளதால் யானைச் சின்னத்தில் போட்டியிட முடியாதென ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய உட்பட கூட்டணியில் பங்கேற்கும் கட்சிகிளின் தலைவர்கள், செயலாளர்கள் முக்கிய பிரதானிகள் பலரும் கலந்து கொண்டனர்.

எனினும் ரணில் விக்கிரமசிங்க, அகில விராஜ் காரியவசம், லக்ஷ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க, நவின் திசாநாயக்க, வஜிர அபேவர்தன, பாலித ரங்கே பண்டார உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தரப்பினர்கள் பங்கேற்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதையே இது காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு பூரண அங்கீகாரம் வழங்கியிருந்தது. அதன் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்கவும் செயற்குழு அனுமதித்திருந்தது. அத்துடன் வேட்பாளர் தெரிவுக்குழுவின் பொறுப்பும் சஜித்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் கட்சியின் சின்னம் தொடர்பிலேயே தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட செயற்குழுக் கூட்டத்தில் சின்னம் தொடர்பிலேயே நீண்ட நேரம் அராயப்பட்டுள்ளது. 

ரணில் விக்கிரமசிங்க, அகில விராஜ் காரியவசம், பாலித ரங்கே பண்டார, வஜிர அபேவர்தன ஆகியோர் யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என விலியுறுத்தியுள்ளனர். எனினும் யானைச் சின்னத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னமாக மாற்றிக் கொடுப்பதற்கு அவர்கள் உடன்படவில்லை.

சின்னத்தை மாற்றிக்கொடுத்தால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் யானைச் சின்னத்தை மீளப்பெற முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சட்டத்தில் உள்ள சிக்கலை சட்டிக்காட்டியுள்ளதாலே யானைச் சின்னத்தை பெற்றுக்கொள்ள சஜித் தரப்பு முயற்சித்திருக்கிறது.

அதே சமயம் அன்னம் சின்னத்தை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்னம் சின்னத்துக்கான கட்சியின் செயலாளர் ஷர்மிளா பெரேரா, கட்சியின் செயலாளராக தன்னை நியமித்தால் மட்டுமே சின்னத்தைத் தரமுடியுமென பிடிவாதமாக இருக்கிறார்.

இதனால் சின்னம் தொடர்பில் உறுதியான முடிவெடுக்க முடியாத இக்கட்டான நிலைக்கு ஐக்கிய மக்கள் சக்தி தள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை யானைச் சின்னத்தைப் பயன்படுத்த புதியதொரு உத்தியை கையாள கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பில் சிறிய மாற்றமொன்றைச் செய்து ஐக்கிய மக்கள் சக்தியை ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப்புக்கட்சியாக மாற்றும் திருத்த யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்துள்ளார். இது தொடர்பல் ரணில் விக்கிரமசிங்க ஆழமாக ஆராய்ந்து வருவதாகத் தெரிய வருகிறது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தாங்கள் ஒருபோதும் வெளியேறப் போவதில்லை எனவும் கட்சியை இறுதிவரை பாதுகாப்போம் என்றும் சஜித் பிரேமதாசவும், ரஞ்சித் மத்துமபண்டாரவும் நேற்றைய தினமும் உறுதிப்படத் தெரிவித்துள்ளனர். 

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிப்பதற்கே தாங்கள் விரும்புவதாகவும் அவரை விடுத்து அரசியல் செய்யும் நோக்கம் எதுவும் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடையாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேசமயம் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்க எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கோ, கட்சியின் முக்கியஸ்தர்கள் எவருக்குமோ ரணில் விக்கிரமசிங்க தடைபோடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் நேற்றைய கூட்டத்தை பகிஷ்கரித்தமை ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னேற்றத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சிக்கலை நிவர்த்திக்கும் பொருட்டு இரு தரப்பிலும் மத்தியஸ்த நிலையிலுள்ள சிலர் சமரச முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். யனைச் சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பிலுள்ள சட்டச்சிக்கல் குறித்தே இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக சமரசக்குழு தெரிவித்துள்ளது.

உடன்படிக்கை கைச்சாத்திடும் இந்நிகழ்வைப் பார்வையிட ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஏனைய பங்காளிக் கட்சிகளின் ஆதரவாளர்களும் தாமரைத்தடாக அரங்கிலும், வெளியேயும் திரண்டிருந்தனர்.

கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மிகக் குறுகிய நேரம் உரையாற்றினார். நிகழ்ச்சி நிரலில் வேறு எவருக்கும் உரையாற்ற நேரம் ஒதுக்கப்படவில்லை. உடன்படிக்கை கைச்சாதிடவே கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment

Post Bottom Ad