ராகம வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட பணியாட்கள் குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

Breaking

Post Top Ad

Friday, March 20, 2020

ராகம வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட பணியாட்கள் குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டனர்

ராகம போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட பணியாட்கள் குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர், ஆண்கள் விடுதியில் சிகிச்சை பெற்றமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார்.

ஜா-எல பகுதியிலிருந்து நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரிடம் கொரோனாவிற்கான அறிகுறிகள் உள்ளனவா, அல்லது வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுடன் தொடர்புகள் காணப்பட்டதா என அடிக்கடி வினவிய போதும், அவற்றை அவர் மறுத்துள்ளார்.

இதனால் இருதய நோய்க்கு தேவையான சிகிச்சையை வழங்குவதற்காக அவரை சாதாரண விடுதியில் வைத்தியர் அனுமதித்துள்ளார்.

எனினும், வைத்தியர்கள் அந்நபர் தொடர்பில் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியமை தெரிய வந்துள்ளது.

சடுதியாக அவரை தனிமைப்படுத்தி, தேவையான சிகிச்சைகளை வழங்க வைத்தியசாலை தீர்மானித்துள்ளது. எனினும், குறித்த நோயாளி ஒன்றரை நாட்கள் சாதாரண விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார்.

இதன் காரணமாக அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்த விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், சிற்றூழியர்கள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள், விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த நோயாளிகள், அவர்களை பார்வையிட வந்தவர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்த நேரிட்டுள்ளது.

தொற்று தொடர்பில் ஏதேனும் அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஊடகங்கள் வாயிலாக அரசாங்கம் அறிவித்த போதிலும், மக்கள் தங்களின் பொறுப்புணர்ந்து செயற்படுவதில்லை என ராகம வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் சரத் பிரேமசிறி சுட்டிக்காட்டினார்.

ஒருவரின் தவறால் வைத்தியசாலையில் பலரையும் தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் டொக்டர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad