இலங்கையில் 550 பேருக்கு கொரோனா தொற்று, அவர்கள் நடமாடியிருந்தால் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பர் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கணிப்பீடு - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

இலங்கையில் 550 பேருக்கு கொரோனா தொற்று, அவர்கள் நடமாடியிருந்தால் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பர் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கணிப்பீடு

எம்.மனோசித்ரா
 
இலங்கையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி சுமார் 550 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும், அவர்கள் பொது வெளியில் நடமாடுபவர்களாக இருந்தால் அவர்களுடன் சுமார் 19,000 பேர் தொடர்புகளைப் பேணியிருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமை காணப்பட்டால் அது இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரங்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கையில் நேற்று புதன்கிழமை நண்பகல் வரை 101 நபர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுப்படுத்தப்பட்டிருந்தது. 

இவர்களில் 32 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து விமான நிலையத்தில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றமை உறுதி செய்யப்பட்டு அங்கிருந்து நேரடியாக தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டவர்களாவர். ஏனைய 69 பேரும் தொற்றுக்குள்ளானோரிடம் தொடர்புகளைப் பேணியதால் பாதிக்கப்பட்டோராவர். 

சாதாரணதொரு கணிப்பீட்டின் படி 550 பேர் இலங்கையில் கொரோன தொற்றுக்குள்ளாகியிருக்கக் கூடும் எனபதோடு இவர்கள் பொது வெளியில் நடமாடுபவர்களாகவும் இருக்கலாம். இந்த 550 பேரும் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பு நிலையங்களிலோ அல்லது சாதாரணமாக வீடுகளில் இருப்பவர்களிலும் உள்ளடங்கலாம். 

இந்த 550 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பிற்கு உற்படாமல் இருப்பார்களாயின் இவர்கள் சுமார் 19,000 நபர்களுடன் தொடர்புகளைப் பேணியிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனவே தொற்று நோய் தடுப்பு பிரிவு, இராணுவம் மற்றும் பொலிஸார் இவர்களைத் தேடும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த கணிப்பின் படி 550 தொற்றுக்குள்ளானோரும் அவர்கள் தொடர்புகளைப் பேணிய 19,000 பேரும் பொது வெளியில் நடமாடுவார்களாயின் அது இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும். 

அத்தோடு கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை ஆகிய மாவட்டங்கள் கூடுதல் பாதிப்புடைய மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் இம்மாதம் 16 ஆம் திகதி முதல் விமான நிலையம் மூடப்பட்டமை, பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமை உள்ளிட்ட நடவடிக்கைகளால் 50 வீதம் மக்கள் ஒன்று கூடல் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கதாகும். 

அத்தோடு இம் மாதம் 20 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் 75 வீதமான மக்கள் மத்தியில் ஒன்று கூடலை தவிர்க்க முடிந்துள்ளது. இவ்வாறு ஒன்று கூடலை தவிர்த்திருக்காவிட்டால் 30 நாட்களுக்குள் ஒரு நபரிடமிருந்து சுமார் 500 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும். 

எனினும் 50 வீதம் தூர இடைவெளி பேணப்பட்டமையால் நபரொருவரிலிருந்து பரவும் வேகம் 15 ஆகவும் 75 வீதம் தூர இடைவெளி பேணப்பட்டதால் பரவலானது 2.5 வீதமாகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad