வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தாபய அரசாங்கம் முயற்சிக்கிறது - News View

Breaking

Post Top Ad

Saturday, February 29, 2020

வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தாபய அரசாங்கம் முயற்சிக்கிறது

வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தாபய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டியில் கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் என்றுமில்லாத வகையில் கடந்த காலத்தில்தான் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து ஒரு நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தது. இந்தக் காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

வடக்கிற்கு அதிகளவான அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் இந்தக் காலப்பகுதியில்தான், இருப்பினும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக முன்னைய அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட நிதியை இந்த அரசாங்கம் விடுவிக்காது செயற்பட்டு வருகின்றது.

அது மட்டுமன்றி கடந்த அரசாங்கத்தால் செய்யப்பட்டு வந்த வேலைத்திட்டங்களையும் இடை நிறுத்தியுள்ளது. தேர்தலுக்கு பின்னரான சூழலில் தமிழ் மக்களுக்கு என்ன நடக்கப்போகின்றது என்ற சூழலில் ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட பிரேரணைகளையும் அதிலிருந்து விலகுவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க மறுபுறத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாகக்கூறி அந்த நேர்முகத் தேர்வில் இராணுவத்தினரைப் பயன்படுத்தியுள்ளது. வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் குழப்பி இராணுவ ஆட்சிக்குள் தமிழ் மக்களை வைத்திருப்பதற்கான முயற்சியாகவே இதன் வெளிப்பாடு உள்ளது. இத்தகைய விடையங்களை தமிழ் மக்கள் சரியாக முறையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இங்குள்ள சிலரும் இணைந்து செயற்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது. தமிழ் மக்கள் கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எவ்வாறு ஆதரவை வழங்கினார்களோ! அத்தகைய ஆதரவை தொடர்ந்தும் வழங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad