முதலாவது வரவு செலவு திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுக்கு தீர்வு - ஒன்றிணைந்த சேவையாக மாற்ற அமைச்சரவை அங்கீகாரம் - News View

Breaking

Post Top Ad

Friday, February 28, 2020

முதலாவது வரவு செலவு திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுக்கு தீர்வு - ஒன்றிணைந்த சேவையாக மாற்ற அமைச்சரவை அங்கீகாரம்

நீண்ட காலமாக தொடர்ந்துவரும் ஆசியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை முற்றாக தீர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், ஆசிரியர் சேவையை ஒன்றிணைந்த சேவையாக மாற்றுவதற்கும் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தேர்தலுக்கு பின்னர் கொண்டுவரப்படும் முதலாவது வரவு செலவுத் திட்டத்திலேயே இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்மொழியப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நடைபெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

மேலும் கூறுகையில், நீண்ட காலமாக நிலவிவரும் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புபட்ட அனைத்து தொழில் துறையினரின் சம்பளம் மற்றும் சேவை நிலை தொடர்பான பிரச்சினைகள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவைக்கான அனைத்து சேவைகளையும் ஒன்றிணைத்து ஒன்றிணைந்த சேவையாக்குவதுடன், சம்பளம் மற்றும் சேவை யாப்பை வகுத்து பொருத்தமான சம்பள முறை ஒன்று வகுப்பது அத்தியாவசியமாகும்.

ஜனாதிபதியின் சுபீட்சமான தொலைநோக்கு கொள்கைத் திட்டத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆசிரியர் அதிபர் சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் குறித்து கல்வி அமைச்சரால் அமைச்சரவைக்கு விரிவான வகையில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரச சேவையில் சம்பளம் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு நிலவும் முரண்பாடுகளை நீக்கக்கூடிய வகையில் புதிய சம்பள கொள்கை ஒன்றை வகுப்பதற்காக ஜனாதிபதியால் சமீபத்தில் தேசிய சம்பள ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைய தேர்தலின் பின்னர் சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவு திட்டத்திலேயே ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுக்கு தீர்வு வழங்கப்படும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad