கூட்டமைப்பை கட்சியாக பதிந்து இளைஞர்களிடம் ஒப்படையுங்கள் - மன்னார் இளைஞர் உண்ணாவிரதம் - News View

Breaking

Post Top Ad

Saturday, February 22, 2020

கூட்டமைப்பை கட்சியாக பதிந்து இளைஞர்களிடம் ஒப்படையுங்கள் - மன்னார் இளைஞர் உண்ணாவிரதம்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உடனடியாக பொறுப்புக்களிலிருந்து இராஜினாமாச் செய்து கட்சியின் ஆலோசகர்களாக செயற்பட வேண்டும். இளைஞர்களைக் கொண்டு கட்சியை பலப்படுத்தி தலைமைகளை செயல்திறன் மற்றும் துடிப்புள்ள அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர் ஒருவர் மன்னாரில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். 

இரத்தினம் ஞானசேகரம் யூலியஸ் என்ற 39 வயதான நபரே நேற்று காலை 11 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். 

இப் போராட்டம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அங்கத்துவ கட்சிகளுடன் இணைந்து கட்சியை பதிவு செய்வதாக கூடி முடிவை மேற்கொண்ட போதும் இதுவரை கட்சியை பதிவு செய்யவில்லை. எனவேதான் இப் பேராட்டத்தை ஆரம்பித்துள்ளேன்.

தமிழர்களின் அடையாள கூட்டணியான தமிழ் தேசிய கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும். அக் கட்சியின் எழுத்து மூல ஆவணத்தை (யாப்பை) உருவாக்கி மக்களுக்கு பொறுப்பாக இருக்க வேண்டும். 

சுமார் 20 வருடங்களாக இக் கூட்டமைப்பிலிருந்து சாதிக்க முடியாமல் போன தலைவர்கள் பொறுப்புக்களிலிருந்து இராஜினாமாச் செய்து கட்சியின் ஆலோசகர்களாக விரும்பினால் தொடருங்கள். இளைஞர்களைக் கொண்டு கட்சியை பலப்படுத்தி தலைமைகளை செயற்றிறன் மற்றும் துடிப்புள்ள அடுத்த தலைமுறையினரிடம் கைமாற்றுங்கள்.

மன்னார் நகர பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து மன்னார் நகர சபைக்கு முன்பாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் குறூப் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad