மலையக சமூக மாற்றத்துக்கான விதைகளை தமிழ் முற்போக்கு கூட்டணி விதைத்துள்ளது - வேலுகுமார் எம்.பி. - News View

Breaking

Post Top Ad

Thursday, February 27, 2020

மலையக சமூக மாற்றத்துக்கான விதைகளை தமிழ் முற்போக்கு கூட்டணி விதைத்துள்ளது - வேலுகுமார் எம்.பி.

"மலையக சமூக மாற்றத்துக்கான விதைகளை தமிழ் முற்போக்கு கூட்டணி விதைத்துள்ளது. எனவே, அவற்றை சிதைக்காமல், உரிய வகையில் பராமரித்து சமூகத்துக்காக அறுவடை செய்ய வேண்டிய கடப்பாடு தற்போது ஆளுங்கட்சியில் இருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு இருக்கின்றது. எனவே, கட்சி அரசியலை நடத்தி முன்நோக்கி செல்லும் மலையகத்தை பின்நோக்கி இழுக்க வேண்டாம் என வலியுறுத்துகின்றோம்." 

இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் (28.02.2020) இன்று காலை நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னரே ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி உதயமானது. அதன்பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் மக்கள் எமக்கு ஆணை வழங்கினார்கள். ஐக்கிய தேசியக்கட்சியின் வெற்றிக்கு எமது மலையக மக்களும் முழுமையான பங்களிப்பை வழங்கினார்கள்.

எம்மக்களின் ஆணையை ஏற்று, அவர்களின் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமை மேம்படுத்துவதற்காக நான்கரை ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுத்தது. கண்டி மாவட்டத்திலும் பல புரட்சிகரமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

அதுமட்டுமல்ல எமது மக்களுக்காக வெளிநாடுகள் மற்றும் அமைப்புகளுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி சிறந்த உறவை பேணியது. இதன்பயனாகவே 10 ஆயிரம் வீடுகளை வழங்குவதற்கு பாரத பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தார். புஸல்லாவை சரஸ்வதி கல்லூரியில் புதிதாக கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கும் இந்திய அரசாங்கத்தால் உதவியளிக்கப்பட்டது.

அத்துடன், பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக 900 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் இந்தியா முன்வந்தது. இதன் முதற்கட்டமாக 300 மில்லியன் ரூபா கிடைக்கும்.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்தில் அரசாங்கத்தையும் மூன்றாம் தரப்பாக இணைப்பதற்கான நடவடிக்கையை எமது அணியே முன்னெடுத்திருந்தது. 

இவ்வாறு எமது சமூக விடுதலைக்காக தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் அபிவிருத்தி அரசியல், உரிமை அரசியல் ஆகிய விதைகள் தமிழ் முற்போக்கு கூட்டணியால் விதைக்கப்பட்டுள்ளன. அவற்றை பராமரித்து அறுவடை செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எது எப்படியிருந்தபோதிலும் பொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சி அதிகாரம் எமது கைகளுக்கு வந்த பின்னர், மலையக மறுமலர்ச்சி திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்." என்றார் வேலுகுமார் எம்.பி.

No comments:

Post a Comment

Post Bottom Ad