நுண் கடனை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறவிடுவதை நிறுத்த வேண்டும் : நிறுவனங்களை ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் - News View

Breaking

Post Top Ad

Friday, February 28, 2020

நுண் கடனை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறவிடுவதை நிறுத்த வேண்டும் : நிறுவனங்களை ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்

(ஆர்.விதுஷா) 

நுண் கடன்களை பெற்றவர்களிடமிருந்து அவற்றை மீளப்பெறாது நிறுத்துமாறும்., நுண்கடன் வழங்கும் நிறுவனங்களை ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டு வருமாறும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார். 

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, நாட்டு மக்களின் ஜீவனோபாயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அவர்களால் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நுண் கடன் திட்டத்தின் காரணமாகவும் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களுள் பெண் தலைமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பலருடைய வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. அவர்கள், கடன் சுமையை தாங்க இயலாது தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

ஆகவே, இந்த கடனை மீளப்பெறாதிருப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த கடன் திட்டத்தின் காரணமாக குடும்பங்களின் குடும்ப பொருளாதார பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. 

வறிய குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான சலுகைத் திட்டங்களை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவு முறைமையின் ஊடாக குறைந்த பட்ச சலுகைகளையேனும் அரசாங்கம் வழங்க வேண்டும். 

அத்துடன், கடன் வழங்கும் நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்களை உறுதிப்படுத்துவதுடன், கடன் பெறுனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமானதாகும். 

அத்துடன், கிராமிய மட்டத்திலான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, சிறிய நடுத்தர வர்த்தகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் பரந்து பட்ட திட்டமொன்றை வகுத்தல் அவசியமானதாகும். 

அதேவேளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மேலும், தற்போதைய பொருளாதார நிலைமையை மையமாக கொண்டு நாட்டு மக்களின் பொருளாதார உரிமையை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிய பாதையில் பயணிப்பதற்கான வழிவகைககள் வகுக்கப்பட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad