பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை - பிரதான சந்தேக நபர்களுள் ஒருவர் கைதான நிலையில் மேலும் இருவருக்கு வலை வீச்சு - News View

About Us

About Us

Breaking

Friday, February 21, 2020

பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை - பிரதான சந்தேக நபர்களுள் ஒருவர் கைதான நிலையில் மேலும் இருவருக்கு வலை வீச்சு

(எம்.எப்.எம்.பஸீர்) 

கடத்தப்பட்டு, கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளின் உயிரிழப்பு தொடர்பில் பிரதான சந்தேக நபர்களுள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதனுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். 

கிரிபத்கொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் வைத்து கடத்தப்பட்டு, கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் இன்று மீட்கப்பட்டது. 

குளியாபிட்டிய - பன்னை, யக்வில காட்டுப் பகுதியின் வேரஹெர- புளுகஹவத்த பகுதியில் வைத்து இந்த சடலம் இன்று அதிகாலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

72 மணி நேரம் யக்வில காட்டில் குளியாபிட்டிய, பன்னை, களனி பொலிஸ் வலயத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுமார் 100 பேர் வரை மோப்ப நாய்களின் உதவியுடன் முன்னெடுத்த தேடுதலில் இந்த சடலம் மீட்கப்பட்டது. 

சடலத்தின் அடையாளங்களை வைத்து, குறித்த சடலம் காணாமல் போன 14535 எனும் இலக்கத்தை உடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஜயந்த ராஜபக்ஷவினுடையது என பொலிஸார் உறுதி செய்துள்ளனர். 

இந்நிலையில் இந்த கடத்தல் மற்றும் கொலையின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரை களனிய, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து கைது செய்துள்ளனர். 

சுத்தா எனப்படும் குறித்த சந்தேக நபரிடம் தொடர் விசாரணைகளை பொலிஸார் தற்போது முன்னெடுத்து வரும் நிலையில், இதனுடன் தொடர்புடைய மேலும் இரு பிரதான சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். 

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவில், மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் மேற்பார்வையில், களனி பொலிஸ் வலயத்தின் பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸின் ஆலோசனைக்கு அமைய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வாவின் கீழான குழுவினர் இது குறித்த பிரதான விசாரணைகளை முன்னெடுக்கின்றனர். 

கடந்த 16 ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் 37 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த ஜயந்த ராஜபக்ஷ என்னும் குறித்த பொலிஸ் கான்ஷ்டபிள் கடத்தப்பட்டிருந்தார். அவர் கடவத்தை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சாரதியாக கட்மையாற்றி வந்தவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment