முன்னாள் கடற்படைத் தளபதிக்கு 4ஆம் முறையாக அழைப்பாணை - இம்முறை பாதுகாப்புச் செயலாளர் ஊடாக அழைப்பாணை - News View

Breaking

Post Top Ad

Monday, February 24, 2020

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு 4ஆம் முறையாக அழைப்பாணை - இம்முறை பாதுகாப்புச் செயலாளர் ஊடாக அழைப்பாணை

முன்னாள் கடற்படைத் தளபதி 'அட்மிரல் ஒப் த பிலீட்' வசந்த கரன்னாகொடவுக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தால் 4ஆவது தடவையாக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை பாதுகாப்புச் செயலாளர் ஊடாக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

11 இளைஞர்களைக் கடத்தி, காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு இன்று (24) விசேட மேல் நீதிமன்றத்தில் சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவ்வாறை அழைப்பாணை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கடந்த ஜனவரி 24ஆம் திகதி வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி.கே.பி. தஸநாயக்க உள்ளிட்ட 14 பேருக்கு ஜனவரி 24ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த தினத்தில் (24) வழக்கில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் ரியர் அட்மிரல் டி.கே.பி. தஸநாயக்க உள்ளிட்ட 13 பேர் முன்னிலையானதோடு, அவர்களுக்கு குற்றப்பத்திரம் வழங்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

அத்துடன் வசந்த கரன்னாகொடவுக்கு பெப்ரவரி 07ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இரண்டாவது தடவை அழைப்பாணை விடுக்கப்பட்டது.

ஆயினும் அன்றையதினமும் (07) முன்னிலையாகாத அவருக்கு மூன்றாவது தடவை அழைப்பாணை விடுக்கப்பட்டது.

அதற்கமைய, பதில் பொலிஸ் மாஅதிபர் மற்றும் கடற்படை தளபதி மூலம் உரிய அழைப்பாணையை அனுப்புமாறு நீதிமன்றத்தினால் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.

ஆயினும் அவர் மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் பாதுகாப்பு செயலாளர் ஊடாக இவ்வாறு விசேட மேல் நீதிமன்றத்தால் நான்காவது முறையாக அழைப்பாணை விடுக்கப்பட்டது.

கடந்த 2008 - 2009 காலப் பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பில் குறித்த இருவர் உள்ளிட்ட 14 பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலேயே குறித்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமது விசாரணை முடியும் வரை முன்னாள் கடற்படை தளபதி ஓய்வு பெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் ரியர் அட்மிரல் டி.கே.பி. தஸநாயக்க ஆகியோர் மீதான வழக்குகளை இடைநிறுத்துமாறு, அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சட்ட மாஅதிபருக்கு கடந்த ஜனவரி 27ஆம் திகதி தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கு தொடர்பில் தமக்கு உத்தரவிட சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா அறிவித்துள்ளார்.

இதேவேளை, அட்மிரல் வசந்த கரன்னாகொட கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி சுமார் 4 மணி நேர வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad