27 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் சென்னைக்கு விமான சேவை - News View

Breaking

Post Top Ad

Saturday, February 22, 2020

27 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் சென்னைக்கு விமான சேவை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் தினமும் நாளாந்த விமான சேவைகள் நடைபெறவுள்ளன. 

இதுவரை காலமும் குறிப்பிட்ட சில தினங்கள் மட்டுமே இந்தியாவுக்கான விமான சேவை நடைபெற்று வந்த நிலையில் 27 ஆம் திகதி முதல் நாளாந்த விமான சேவைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விமான சேவை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

அதற்கான நேர அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளதாக யாழ்.வர்த்தக சங்க உப தலைவர் ஆர்.ஜெயசேகரன் தெரிவித்தார். யாழ்.மானிப்பாய் வீதியிலுள்ள யாழ். வணிகர் கழகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் குறிப்பிட்டதாவது, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களே கடந்துள்ளன. ஆயினும் அச் சேவைகள் என்பது குறிப்பிட்ட சில தினங்கள் மட்டுமே நடந்தது.

இந்நிலையில் பலரதும் கோரிக்கைகளுக்கமைய பயணிகளுக்காக இந்த சேவை இன்னும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

அதாவது 27 ஆம் திகதி முதல் நாளாந்த விமான சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனை விமான சேவையில் ஈடுபடும் நிறுவனமே எமக்கு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பை நாம் மக்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

இங்கு புதிதாக அமைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தின் விமான சேவைகள் வர்த்தகர்கள் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும் நன்மையையும் ஏற்படுத்தியிருக்கின்றது. 

இந்த நிலையில் அதன் சேவைகள் இன்னும் அதிகரிக்கப்படுவது அனைவருக்கும் மிக மகிழ்ச்சியாகவும் பல வழிகளிலும் நன்மையை ஏற்படுத்துவதாகவுமே அமைகின்றது.

இதேவேளை, காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்பட்டு அதனுடான கப்பல் சேவைகளையும் விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad