களனி பல்கலைக்கழகத்தின் 25 மாணவர்களுக்கு 2 வருட வகுப்புத் தடை - கைதான பிக்கு மாணவர் உள்ளிட்ட நால்வருக்கும் விளக்கமறியல் - - நாளை முதல் தலுகம வளாகம் தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, February 28, 2020

களனி பல்கலைக்கழகத்தின் 25 மாணவர்களுக்கு 2 வருட வகுப்புத் தடை - கைதான பிக்கு மாணவர் உள்ளிட்ட நால்வருக்கும் விளக்கமறியல் - - நாளை முதல் தலுகம வளாகம் தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு

களனி பல்கலைக்கழக வளாகத்தில் CCTV களை கழற்றிய சம்பவம் தொடர்பில், பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 25 பேருக்கு 2 வருட வகுப்புத் தடை விதிக்க பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பு மற்றும் ஊடக பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2017/2018 கல்வியாண்டு நாளையுடன் (29) நிறைவடையும் நிலையில், நாளை காலை 8.00 மணி முதல் களனி பல்கலைக்கழகத்தின் தலுகம வளாகத்தை அனைத்து மாணவர்களுக்கும் தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விடுதிகளில் உள்ள மாணவர்களை நாளை காலை 8.00 மணிக்கு முன் வெளியேறுமாறும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வார இறுதி முதுகலை பட்டப்படிப்பு, டிப்ளோமா, சான்றிதழ் பாடநெறிகள் மற்றும் அது தொடர்பான பரீட்சைகள் அனைத்தும் மீள அறிவிக்கும் வரை இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் கைதான களனி பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் கொபெய்துடுவே சமித தேரர் உள்ளிட்ட 4 மாணவர்கள், இன்றைய தினம் (28) மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 16 மாணவர்கள் நேற்று (27) கைது செய்யப்பட்டதோடு, அவர்களில் 12 பேர் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி இன்றையதினம் பல்வேறு பல்கலைக்கழகங்களின் முன்னாலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மீது விதிக்கப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவையும் பொருட்படுத்தாது, ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் உயர் கல்வி அமைச்சின் முன்னால் 'சத்தியாக்கிரகத்தை' தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

பகிடிவதை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் ருஹுணு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை அகற்றுமாறு கோரி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நேற்று (27) இரவு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவை குறித்த இடத்தில் பொலிஸார் காட்சிப்படுத்த முயற்சி செய்த வேளையில், மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment