இடைக்கால பட்ஜட்டை சமர்ப்பிக்காது இந்தியா, சீனாவிடம் கடன் பெறுவதிலே அரசு ஆர்வம் - 13 வாரங்களாக வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கத் தவறியது ஏன்? - News View

About Us

About Us

Breaking

Monday, February 24, 2020

இடைக்கால பட்ஜட்டை சமர்ப்பிக்காது இந்தியா, சீனாவிடம் கடன் பெறுவதிலே அரசு ஆர்வம் - 13 வாரங்களாக வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கத் தவறியது ஏன்?

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்த்தபோதும் அதனைச் செய்யாமல் இந்தியா, சீனா உட்பட சர்வதேச நாடுகளிடம் கடன் பெறுவதிலேயே அரசாங்கம் ஆர்வம்காட்டி வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இதனால் நாடு மீண்டும் பொருளாதார ரீதியில் பின்னடைவுக்கே இழுத்துச் செல்லப்படுவதாகவும் குற்றம் சுமத்தினார்.

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தால் எதிர்க்கட்சி அதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்றக் கட்டடத்தில் நேற்று (24) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாது அரசாங்கம் மக்கள் சார்பு வரவு செலவுத் திட்டத்தை இடைக்காலத்திற்கு கொண்டு வருமென கடந்த 13 வாரங்களாக எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால் அரசு அதனைச் செய்யத் தவறிவிட்டது. இவ்வறிக்கை

கொண்டு வரப்பட்டிருந்தால் ஆதரவளிக்க எதிர்க்கட்சி தயாராக இருந்தது. செய்ய வேண்டியதை செய்யத் தவறிய அரசு செய்யக் கூடாததை செய்வதிலேதான் முனைப்புக்காட்டியுள்ளது.

எமது ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்திய கம்பெரலிய திட்டத்தை இரத்துச் செய்ததுடன், என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா திட்டத்தை மூடியும் விட்டது. கர்ப்பிணித் தாய்மாருக்கு வழங்கப்பட்ட போஷனைப் பொதியை இல்லாமல் செய்துள்ளனர். சம்பள அதிகரிப்பை நிறுத்தியுள்ளனர். சீருடையும் குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறுபட்ட நிவாரணங்கள், அபிவிருத்திகளை அரசு இல்லாமலாக்கியுள்ளது. இவற்றையெல்லாம் செய்துவிட்டு இந்தியாவுக்குச் சென்ற பிரதமர், கடனுக்கு கால அவகாசம் தருமாறு கேட்டுக் கொண்டார். அது நடந்தால் சீனாவும் கால அவகாசம் தருமென்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு கூறிவிட்டு நாடு திரும்பிய அவர், பாராளுமன்றத்தில் கடன் எல்லையை அதிகரிப்பதற்கான யோசனையை முன்வைத்தார். அதனை நாம் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை.

புத்தாண்டை கொண்டாட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க எதிர்க்கட்சி இடமளிப்பதில்லை என எம்மீது பழிசுமத்த முயற்சிக்கின்றனர். மக்களை பிழையாக வழி நடத்தவே அரசு முனைகிறது.

13 வாரங்களாக வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கத் தவறியது ஏன்? எனக் கேட்கின்றேன்.

அரசாங்கம் மிக மோசமான நிதி முகாமைத்துவத்தை பின்பற்றுகின்றது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்று முழுதாக சீர்குலைந்துள்ளது. மக்களை ஏமாற்றும் போலித்தனத்தையே இவர்கள் திட்டமிடுகின்றனர்.

பொதுத் தேர்தலில் நாம் அதிகாரத்துக்கு வந்தால் மக்கள் சார்ந்த வேலைத் திட்டங்களையே அமுல்படுத்துவோம். சிறந்த பொருளாதாரத்திட்டத்தை அறிமுகப்படுத்துவோம்.

இந்த மக்கள் சார்ப்பு பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு சுதந்திரக் கட்சியை சேர்ந்த கிராமிய மக்களை அழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment