தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் செயற்படுகின்றவர்கள்தான் ஊடகவியலாளர்கள், ஒற்றுமையான குரல்களுக்கு நாங்களும் பக்கபலமாக இருப்போம் - சிறிநேசன் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2020

தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் செயற்படுகின்றவர்கள்தான் ஊடகவியலாளர்கள், ஒற்றுமையான குரல்களுக்கு நாங்களும் பக்கபலமாக இருப்போம் - சிறிநேசன் எம்.பி.

அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறு ஊடகவியலாளர்களின் ஒற்றுமையான குரல்களுக்கு நாங்களும் பக்கபலமாக இருப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் அமரர் சு.சுகிர்தராஜன் அவர்களின் 14வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடக தர்மத்திற்காக தங்களது உயிரையும் பொருட்படுத்தாது செயற்படுகின்றவர்கள்தான் ஊடகவியலாளர்கள். 

அந்த வகையில் எதற்கும் விலை போகாமல் மனிதர்களைப் பாதுகாக்க வேண்டும், மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுகின்ற உண்மையான ஊடகவியலாளர்களை நாங்கள் எப்போதும் மதிக்க வேண்டும். அவர்களது மரியாதையை எந்த இடத்திலும் குறைத்து விடக் கூடாது.

அமரர் சுகிர்தராஜனின் நினைவினை நாங்கள் மனதில் சுமந்து கொள்கின்றோம். இவ்வாறான ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் காரணமாகத்தான் ஒடுக்கு முறைகள், அடக்கு முறைகள், சர்வாதிகாரம், மனித உரிமை மீறல்கள் என்பன தடுக்கப்படுகின்றன. அவ்வாறான உன்னதமான சேவை செய்பவர்களை நாங்கள் எப்போதும் மறக்கக் கூடாது.

அடக்கு முறைகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறு ஊடகவியலாளர்களின் ஒற்றுமையான குரல்களுக்கு நாங்களும் பக்கபலமாக இருப்போம். மாறாக அதிகார சக்திகளுக்கும், சர்வாதிகளுக்கும் ஊது குழல்களாக ஊடகவியலாளர்கள் இருந்து விடக் கூடாது.

இன்னும் இன்னும் இவ்வாறான உன்னத உயிர்கள் பறிக்கப்படுகின்ற சூழல் இந்த நாட்டில் ஏற்பட்டுவிடக் கூடாது. அவ்வாறு ஏற்பட்டால் நாட்டின் ஜனநாயகம் பொய்த்துப் போய்விடும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment