Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ், மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், Dream Destination திட்டத்தின் கீழ் மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (15) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் படி நிலைபேறான, நவீன மற்றும் தரப்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து கட்டமைப்புடன் கூடிய அழகான வாழ்க்கை முறையை அடைவதற்காக, புகையிரத நிலையங்களில் பொது வசதிகளை மேம்படுத்தல், புகையிரத நிலையங்களை வசதியான மற்றும் பாதுகாப்பான இடங்களாக மாற்றும் நோக்கத்துடன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் Clean Sri Lanka வேலைத்திட்டம், தேசிய புத்திஜீவிகள் அமைப்பு (NIO Engineering) அரச-தனியார் பங்களிப்பின் கீழ் நாட்டில் நூறு புகையிரத நிலையங்களை நவீனமயமாக்கும் தேசிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பு மற்றும் வசதியை வழங்கும் சுத்தமான, அழகான புகையிரத நிலைய கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புகையிரத நிலையத்தில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டதுடன் கட்டுப்பாட்டு அறை உட்பட பல இடங்களையும் பார்வையிட்டார்.
புகையிரத திணைக்களத்திற்கே உரித்தான 'ருஹுனு குமாரி' என்ற புதிய சிங்கள கணினி எழுத்துருவும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகையிரத நிலையமாக கருதப்படும் மருதானை புகையிரத நிலையம், கொழும்பு மாவட்டத்தில் இரண்டாவது பெரிய புகையிரத நிலையமாக கருதப்படுகிறது. இந்த நவீனமயமாக்கல் பணிகள், இதன் புராதனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, புகையிரத சேவையை புறக்கணிப்பதும் பழைய அரசியல் கலாசாரத்திற்கு பலியாகுபவர்களாக புகையிரத சேவை ஊழியர்கள் மாறி இருந்ததும், இந்த நாட்டில் தரமான புகையிரத சேவையைக் கட்டியெழுப்புவதில் சவாலாக இருந்தது.
மக்களின் அன்றாட போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிரதான வழிமுறையான புகையிரத சேவை குறித்து பொதுமக்களின் நம்பிக்கையை வளர்த்து, செயற்திறன்மிக்க மற்றும் வினைத்திறனான புகையிரத சேவையைப் பேணுவதும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும், புகையிரத தொழிற்சங்கங்கள், பயணிகள் மற்றும் பிரதேச வாசிகள், தனியார் துறையினர் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும், அதற்காக எதிர்காலத்தில் அனைவரின் ஆதரவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் தொழில் முயாற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு,மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப், பாராளுமன்ற உறுப்பினர்களான நஜித் இந்திக, லக்மாலி ஹேமசந்திர, கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர், சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. பெரேரா, புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய, அரச அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள், புகையிரத திணைக்கள அதிகாரிகள், Clean Sri Lanka செயலக அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment