கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ், பணியாற்றியதாக சந்தேகிக்கப்படும் ஆறு பேரை கைது செய்ய குற்றப்புலனாய்வு பிரிவு முடிவு செய்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில், கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கடத்தல்கள் மற்றும் நபர்கள் காணாமலாக்கப்பட்ட சம்பவங்களில், தொடர்புற்றிருந்ததாக சந்தேகிக்கப்படும் இவர்கள் விரைவில் கைதாகவுள்ளனர்.
ஏற்கனவே, இக்குற்றச்சாட்டுக்களின் பிரதான சந்தேகநபரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதபோன்று இனிய பாரதியும் இக்குற்றச்சாட்டுகளுக்காக கைதாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளிலேயே இந்த ஆறு பேரும் கைதாகவுள்ளனர். இவர்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் காலங்களில் துரிதப்படுத்தப்படவுள்ளன.
தற்போது கைதாகவுள்ள இவர்களுடன் தொடர்புடைய இருவர் கடந்த வாரம் மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் வாழைத்தோட்டம் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டனர்.
2007-2008 ஆண்டு காலப்பகுதியில் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான ஆயுதக் குழுவினர், மேற்கொண்டிருந்த குற்றங்கள் தொடர்பில் பல் தரப்பு தகவல்கள் கிடைத்து வருகின்றன.
அரசியல்வாதிகளைப் படுகொலை செய்தமை, ஆட் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இக்குழுவினர் செய்து வந்ததாக புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவல்களுக்கமையவே, இக்குழுவினர் தேடப்பட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment