CID யின் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் அனுப்பிய கடிதத்தால் சர்ச்சை : சபை உறுப்பினர்கள் மூவர் தனக்கு வழங்கியதாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 10, 2025

CID யின் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் அனுப்பிய கடிதத்தால் சர்ச்சை : சபை உறுப்பினர்கள் மூவர் தனக்கு வழங்கியதாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தெரிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனால், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக் கூறப்படும் இந்த கடிதம் குறித்து விசாரணை நடத்திய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், மேலதிக விசாரணைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். 

இதேவேளை, இக்கடிதத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ், புணர்நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு வலியுறுத்தி, சிறையிலுள்ள பிள்ளையான் கையெழுத்திட்ட கடிதம் தன்னிடம், கடந்த 7ஆம் திகதி கையளிக்கட்டதாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தெரிவித்தார்.

இந்த கடிதத்தை சபை உறுப்பினர்கள் மூவர் தமக்கு வழங்கியதாகவும், அக்கடிதம் பிள்ளையானின் கையெழுத்து பிரதி செய்யப்பட்டதைப்போன்று காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனாலேயே இது குறித்து தான் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கடிதம் எழுதியதாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் குறிப்பிட்டார்.

பிள்ளையானின் இந்த கடிதம் தொடர்பாக கொழும்பிலிருந்து வந்திருந்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தன்னிடம் சுமார் அரை மணித்தியாலம் விசாரணை மேற்கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, குறிப்பிட்ட நிதி ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பொது நூலகத்தில் தற்போது பூர்த்திச் செய்யப்படாமலிருக்கும் பணிகளை விரைவாக பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட முதல்வர் சிவம் பாக்கியநாதன், விரைவில் பொதுமக்களின் பாவனைக்கு நூலகம் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment