(எம்.ஆர்.எம்.வசீம்)
பிரதமர் பாராளுமன்றத்தில் ஒரு விடயத்தை தெரிவித்து, அதில் தவறு இடம்பெற்றிருந்தால், அதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு பிரதமருக்கே இருக்கிறது. பிரதமர் அவ்வாறு எதனையும் தெரிவிக்காத நிலையில், பிரதமர் தெரிவித்த விடயத்தில் தவறு இருப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருக்கும் இந்த செயல், அவர் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தது போன்ற ஒரு நடவடிக்கையாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
சுப்ரிம் செட் செய்மதி தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்த பதில் தவறு என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்த கூற்று தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் பிரதமர் என்பவர், அந்த அரசாங்கத்தின் தலைவர். அதனால் ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக இருக்கும் பிரதமர் பாராளுமன்றத்தில் ஒரு விடயத்தை தெரிவித்து, அதில் ஏதாவது தவறு இடம்பெற்றிருந்தால், அதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு பிரதமருக்கே இருக்கிறது. அதுதான் பாராளுமன்ற சம்பிரதாயம்.
அவ்வாறு இல்லாமல் பிரதமரால் ஏற்படுத்தப்பட்ட தவறை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருக்கு திருத்த முடியாது. அவ்வாறு செய்வது தவறாகும்.
சுப்ரிம் செட் செய்மதி தொடர்பில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பிரதமர் கடந்த பாராளுமன்றத்தில் பதில் வழங்கி இருந்தார். பிரதமரினால் தெரிவிக்கப்பட்ட பதில் பிழையென அமைச்சர் வசந்த சமரசிங்க மறுநாள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தவறாகும்.
பிரதமர் தெரிவித்த விடயங்களில் ஏதாவது தவறு இருக்குமாக இருந்தால், அதனை பிரதமரே பாராளுமன்றத்தில் சரி செய்ய வேண்டும். அவ்வாறு எந்தனையும் பிரதமர் தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கையில், பிரதமர் தெரிவித்த விடயத்தில் தவறு இருப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருக்கும் இந்த செயல், அவர் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தது போன்ற ஒரு வேலையாகும். இது பாரிய பிரச்சினையாகும்.
பாராளுமன்றத்தில் பிரதமர் ஒரு விடயத்தை தெரிவித்தால், அதற்கு எதிராக அமைச்சர்கள் யாருக்கும் கதைக்க முடியாது. தற்போதுள்ள அரசாங்கத்தில் இருப்பவர்கள் பாராளுமன்ற முறைமைக்கு எதிரானவர்களாக இருக்கலாம். என்றாலும் வெளவ்வாலின் திருமண வீட்டுக்கு வந்தால் தொங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்பதுபோல், விரும்பியோ இல்லையோ அதிகாரத்துக்கு வந்திருக்கும் இவர்கள் பாராளுமன்ற முறையை பின்பற்றியே ஆகவேண்டும்.
அத்துடன் மக்கள் தெரிவித்தால், அதிகாரத்தை கைவிடவும் தயார் என சிலர் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு தப்பிச் செல்ல இவர்களுக்கு இடமளிக்க முடியாது.
நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்றே இவர்கள் வந்தார்கள். அதனால் எடுத்த பொறுப்பை தற்போது செய்ய வேண்டும். அதனால் எதிர்க்கட்சிகள் ஒருபோது அரசாங்கத்தை விரட்டுவதற்கு சதித்திட்டம் மேற்கொள்வதில்லை. மாறாக அரசாங்கத்தை தொடர்ந்தும் வைத்துக்கொள்ளவே சதித்திட்டம் மேற்கொள்கிறது.
அதனால் சதித்திட்டம் என்ற கதையை ஜனாதிபதி இதன் பின்னராவது கைவிட வேண்டும். நிறைவேற்று அதிகாரத்தையும் வழங்கி பாராளுமன்றத்தில் 159 உறுப்பினர்களையும் மக்கள் வழங்கியுள்ள நிலையில், சதித்திட்டம் மேற்கொள்வதாக ஜனாதிபதி சிறுபிள்ளைபோன்று அழுது கொண்டிருக்கிறார். நாங்கள் அரசாங்கத்தை விரட்டுவதற்கு சதித்திட்டம் மேற்கொள்வதில்லை. மாறாக அரசாங்கத்தை வைத்துக் கொள்ளவே சதித்திட்டம் மேற்கொள்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment