(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருவதன் மூலம் இலங்கை இஸ்ரேலின் கொலணியாகியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தில் இருக்கும் கொலை குற்றவாளிகள் மன ஆறுதல் பெறுவதற்கு இலங்கைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு அரசாங்கம் தற்போது இலவச விசா வழங்குகிறது என எஸ்.எம். மரிக்கார் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற இலங்கை மின்சாரம்(திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சியில் இருக்கும்போது பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க தூதரகத்துக்கு முன்னாலும் வேறு இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. ஆனால் இன்று இரண்டு மூன்று கொள்கைகளை கடைப்பிடித்த வருகிறது.
பாெத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருகின்றன. அந்த பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின் மனித கொலைகாரர்கள், யுத்தக் குற்றம் இளைத்தவர்கள். அவர்கள் மன ஆறுதல் அடைவதற்கு இங்கு வருகிறார்கள். அந்த பகுதியில் ஹோட்டல்களை அமைத்துக்கொண்டு, இலங்கையர்களுக்கு செல்ல முடியாது. வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் என தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நாட்டுப்பற்று தொடர்பில் கதைத்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் தற்போது ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது.
6 மாதங்களுக்கு முன்னர் இங்குவந்த இஸ்ரேல் இனத்தவர்கள் பாரியளவில் இருக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் அரசாங்கம் தற்போது இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கி இருக்கிறது. அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் எங்கே என கேட்கிறோம்.
அந்த பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களை விட தமிழ், கிறிஸ்தவ பெண்கள் மற்றும் பிள்ளைகள் கையாட்களாகி இருக்கிறார்கள். அந்த பிரதேசம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது இராணுவத்தினருக்கு புரிகிறது. ஆனால் பொலிஸார் எதனையும் கண்டும் காணாமல் போன்று, செயற்படுகிறார்கள். அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து யாராவது அழுத்தங்களை கொடுக்கிறார்களோ தெரியாது.
இலங்கையில் அறுகம்பை பிரதேசத்தை இஸ்ரேலின் கொலணியாக்குவதற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கப்போகிறதா என கேட்கிறோம். அதேபோன்று யுத்தக் குற்றவாளிகளின் அடைக்கலமாக ஏற்படுத்திக் கொள்ள இடமளிக்கப்போகிறதா என்று கேட்கிறோம்.
இலங்கை ஜனநாயகம் இஸ்ரேலாக்கப்பட்டு வருகிறது. எனவே இது தொடர்பில் அரசாங்கம் தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தில் இருப்பவர்கள் இது தொடர்பில் அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment