அரசாங்கம் சமஷ்டியை கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சமஷ்டி என்பது பிரிவினைவாதம் அல்ல : நீங்கள் எத்தனை வருடங்கள் இருந்தாலும் ஜனநாயக ரீதியில் ஒருநாளில் உங்களின் ஆட்சி விழத்தான் போகின்றது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 22, 2025

அரசாங்கம் சமஷ்டியை கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சமஷ்டி என்பது பிரிவினைவாதம் அல்ல : நீங்கள் எத்தனை வருடங்கள் இருந்தாலும் ஜனநாயக ரீதியில் ஒருநாளில் உங்களின் ஆட்சி விழத்தான் போகின்றது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் சமஷ்டியை கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சமஷ்டி என்பது பிரிவினைவாதம் அல்ல. அது தொடர்பில் கலந்துரையாடல் என்ற உண்மையை சிங்கள மக்களிடம் கூறும் வரையில் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாது. அரசாங்கம் வித்தியாசமானது என்ற அடிப்படை நம்பிக்கையாவது வளர்க்க தொடங்குங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின் போது வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இலங்கை தமிழரசுக் கட்சியானது 1949ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட நாளில் இருந்து சமஷ்டி என்ற கோட்பாட்டை வலியுறுத்தி வரும் கட்சியாகும். ஆனால் இந்தப் பிரேரணையில் தமிழரின் இனப் பிரச்சினக்கான தீர்வு தொடர்பான சமஷ்டி என்ற கருத்து வலியுறுத்தப்படவில்லை.

அண்மைக்காலமாக தமிழரசுக் கட்சியின் தலைமத்துவத்தின் செயற்பாடுகள் அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகியுள்ளதாகவே எங்களின் குற்றச்சாட்டு உள்ளது.

ஆனால் பாராளுமன்ற உறுபபினர் சிறீதரன் அவ்வாறான குற்றச்சாட்டை குறிப்பிடக்கூடியவர் அல்ல. எனினும் இந்தப் பிரேரணையானது அந்தக் கொள்கையை தவிர்த்திருப்பது எங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கின்றது.

கடந்த தேர்தலில் சமஷ்டிக்கும் மற்றும் பொறுப்புக்கூறலில் சர்வதேச விசாரணைக்காகவே ஆணையை பெற்றது. ஆனால் சர்வதேச விசாரணையும் இந்தப் பிரேரணையில் தவிர்க்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை கொடுக்கின்றது.

ஏன் இதனை குறிப்பிடுகின்றேன் என்றால் இந்த அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணையை நாங்கள் செய்வோம் என்றே கூறுகின்றது. கடந்த 70 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தின்படி இலங்கையின் இனப் பிரச்சினை இனவாதத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது என்று அரசாங்கமே கூறுகின்றது. அப்படியெனில் கடந்த 76 வருடங்களாக இயங்கிய அரச கட்டமைப்பில் தமிழர்கள் நம்பிக்கை வைக்க முடியுமா?

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் கடந்த வாரத்தில் குமணன் என்ற ஊடகவியலாளர் அழைக்கப்பட்டு அவரிடம் 7 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இராணுவம் கொலைகளை செய்கின்றது. இந்த அரசாங்கத்திலேயே இது நடக்கின்றது. இந்த அரசாங்கம் அந்த மனோநிலையில் இல்லை என்று கூறினாலும் அது நடப்பதற்கான காரணங்கள் உள்ளன.

அந்த மாற்றங்களை செய்வதற்கு இந்த அரசாங்கம் நேர்மையாக செயற்பட தயாராக இருந்தாலும் இந்த அரசாங்கம் நிரந்தரமாக இங்கிருக்கப் போவதில்லை. ஜனநாயகத்தை கடைபிடிக்கும் அரசாங்கமாக இருந்தால் அரசாங்கம் மாறும். இருந்தவர்கள் இனவாதிகள் என்று இவர்களே கூறுகின்றனர்.

கடந்த 76 வருடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும். ஜே.வி.பி அல்லது என்.பி.பியை நிரந்தரமாக ஆட்சியில் வைப்பதன் ஊடாக மட்டுமே அதனை செய்யலாம்.

தமிழ் மக்கள் கண்மூடிக்கொண்டு அவர்களுக்கு வாக்களித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதா தீர்வு? தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் தீர்வு கிடைக்காதா? யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு இனவாதம் பாயாது, பயங்கரவாத தடைச் சட்டம் பாயாது என்ற பாதுகாப்பு அவசியமல்லவா.

எமது தேச அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது என்றால் அந்த தேச அடையாளத்தை அங்கீகரித்து நாங்களும் இந்த தேசத்தில் நிரந்தரமானவர்கள் என்பதனை அங்கீகரிப்பதில் என்ன தவறு உள்ளது. எனது சொந்த வீட்டில் என்னுடைய பிரச்சினையை கையாழுவதில் என்ன பிரச்சினை உள்ளது.

நாங்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றோம். ஏன் அதனை மறுக்கின்றீர்கள். உங்களின் வாயால் அந்த வாக்குறுதியை வழங்காமல் இருக்கின்றீர்கள். இதனை இந்த அரசாங்கம் செய்வதற்கு தயாராக இல்லை.

கடந்த 76 வருடங்களாக மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பயன்படுத்திய அதே சொற்பதற்களை இந்த அரசாங்கம் பயன்படுத்த முடியாது. ஆனால் அதுதான் இன்னும் நடக்கின்றது. இங்கு தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்குவதில் என்ன தவறு?

தமிழ் மக்களுக்கு தமது உரித்த இடத்தில் அங்கீகாரத்தை வழங்கி அவர்கள் ஆளக்கூடியதை உறுதிப்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது. நாங்கள் வேறுபட்டவர்கள் என்பதை அங்கீகரிப்பதில் என்ன பிரச்சினை. இதன் மூலம் ஒற்றுமையை உருவாக்காதா?

கடந்த 76 வருடங்களாக இலங்கையர்கள் என்ற போர்வையில் சிங்கள பௌத்தம் மட்டுமே ஆட்சி செய்தது. நிரந்தர பெரும்பான்மை இனத்தின் நலன்களை மட்டும் கடைபிடித்த வரலாறுதான் உண்டு. இதனை நீங்கள் 5 வருடங்களில் மாற்ற முடியாது.

நீங்கள் எத்தனை வருடங்கள் இருந்தாலும் ஜனநாயக ரீதியில் ஒருநாளில் உங்களின் ஆட்சி விழத்தான் போகின்றது. வருகின்றவர்கள் பழையபடி நடந்துகொண்டால் தமிழ் மக்களின் நிலைமை என்ன? இதனை அரசியலமைப்பின் ஊடாக அங்கீகரிக்க கோருவது இனவாதமா? இது தவறா?

தென்னிலங்கை மக்கள் கடந்த 76 வருடங்களாக நடந்த அரசியலை கைவிட்டுள்ளனர். அதனால்தான் நீங்கள் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள். அந்த நிமிடத்தை நாங்கள் கைவிடக்கூடாது. இது திரும்பவும் வரப்போவதில்லை. உங்களுக்கு அந்த சந்தர்ப்பம் உண்டு. உங்களை முற்றிலும் வித்தியாசமான தரப்பாக சிங்கள மக்கள் பார்க்கின்றனர்.

இவ்வளவு காலங்களிலும் இனவாதிகள் என்று நீங்களே குறிப்பிடுபவர்கள் கடந்த காலங்களில் செய்தவை அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்துவதில் சிங்கள மக்கள் உள்ளனர். இதனால் உங்களுக்கு ஒரு கடமை உள்ளது. அதாவது தமிழ் மக்கள் கூறும் சமஷ்டி பிரிவினைவாதம் அல்ல என்ற உண்மையை சிங்கள மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

நீங்கள் சமஷ்டியை கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சமஷ்டி பிரிவினைவாதம் அல்ல என்ற உண்மையை நீங்கள் கூற வேண்டும். அந்த விவாதத்தை வெளிப்படையாக நடத்தலாம் என்று நீங்கள் கூறலாம். 76 வருடங்களாக சிங்கள மக்களுக்கு கூறிய பொய்களை இன்றும் நீங்கள் திருத்தாமல் இருக்கின்றீர்கள். இங்கேதான் எங்களுக்கு சந்தேகங்கள் எழுகின்றன.

ஒற்றையாட்சிதான் விருப்பம் என்று நீங்கள் கூறினாலும் தமிழர்கள் கூறும் சமஷ்டி பிரிவினை இல்லை. உலகததில் முன்னேறியுள்ள நாடுகள் கடைபிடிக்கின்ற கொள்கை அதனையும் நாங்கள் விவாதிக்கலாம் பேசலாம் என்ற உண்மையை கூறுங்கள்.

இப்போது நீங்கள் உண்மையில் திருந்திவிட்டீர்கள். உங்களுடைய அரசாங்கம் மற்றையவர்கள் போலல்ல. நீங்கள் வித்தியாசமானவர்கள் என்ற அடிப்படை நம்பிக்கையாவது வளரத் தொடங்கும். அதுவரையிலும் அந்த நம்பிக்கை வருவது என்பது மிகவும் கடினமான விடயமே என்றார்.

No comments:

Post a Comment