(எம்.மனோசித்ரா)
சுபரீம் செட் செய்மதி நாட்டுக்கு இலாபமீட்டித் தரக் கூடியதாக அமைந்திருந்தால் 13 ஆண்டுகள் ராஜபக்ஷர்கள் அமைதியாக இருந்திருக்க மாட்டார்கள். முதலீட்டு சபை வழங்கிய தகவல்களையே பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் முன்வைத்தார். எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு அவரை பதவி நீக்க வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (12) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், உலகில் தகவல் தொலை தொடர்பாடல் தொழிநுட்பத்துக்காக சர்வதேச தொலை தொடர்பாடல் சங்கம் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதித்துவ அலுவலகமாக செயற்படுகின்றது. இதன் ஊடாகவே சுப்ரீம் செட் தொடர்பான தொழிநுட்ப மற்றும் ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சர்வதேச தொலை தொடர்பாடல் சங்கமானது செய்மதியொன்றை அனுப்பும் செயற்பாட்டை மூன்று பிரதான வழிமுறைகளின் கீழ் செயற்படுத்துகின்றது. உலகலாவிய ரீதியில் அந்த வழிமுறைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகளுக்கு ஆகக் குறைந்தது 3 ஆண்டுகளும் ஆகக் கூடியது 7 ஆண்டுகளும் எடுக்கும்.
சர்வதேச தொலை தொடர்பாடல் சங்கத்தில் இலங்கை தொலை தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அங்கத்துவம் வகிக்கிறது. அதற்கமைய இலங்கைக்கு 125.5 மற்றும் 50 ஆகிய இரு புவிசரிதவியல் ஸ்தளங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
சர்வதேச தொலை தொடர்பாடல் சங்கம் வழங்கியுள்ள தகவலுக்கமைய இவ்விரு ஸ்தளங்கள் இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை, ஆப்கானிஸ்தான், கிரிகிஸ்தான், மோல்தோவா, நேபாளம், ரொமேனியா போன்ற நாடுகளுக்கும் தேவையேற்படின் தடையின்றி இந்த ஸ்தளங்களில் அவர்களது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இந்த ஸ்தளங்களில் இலங்கையின் பெயரில் எந்தவொரு செய்மதியும் இல்லை என்பதே சர்வதேச தொலை தொடர்பாடல் சங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள தகவலாகும்.
சுப்ரீம் செட் 1 என்ற செய்மதியொன்று காணப்படுகின்றதா என்பது தொடர்பில் சர்வதேச தொலை தொடர்பாடல் சங்கத்தின் ஊடாக ஆராயப்பட்டது. ஆனால் அவ்வாறானதொரு செய்மதியும் இல்லை.
எவ்வாறிருப்பினும் சுப்ரீம் செட் 1 என்ற செய்மதி பின்னர் சீனா செட் 1 எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான புவிசரிதவியல் ஸ்தளத்தில் சீனா செட் 1 என்ற செய்மதி இருப்பதாக சர்வதேச தொலை தொடர்பாடல் சங்கத்தின் இணையதளத்திலும் இல்லை.
சுபரீட் செட் என்ற பெயரில் செய்மதியொன்று இருக்கின்றதா என்று ஆராய்ந்தபோது இலங்கைக்கு உரித்தான புவிசரிதவியல் ஸ்தானங்களுக்கு அப்பால் சீனா செட் செய்திமதிகள் காணப்படுவதாகவே தெரியவந்துள்ளது. மாறாக இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஸ்தளங்களில் அல்ல.
சுபரீம் செட் என்ற நிறுவனத்துக்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் 2011.05.23 அன்று ஒப்பந்தமொன்று எட்டப்பட்டுள்ளது. ரன்வன் ரன்வத் என்ற நிறுவனமே சுப்ரீம் செட் நிறுவனத்தின் கணக்காய்வு நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் வழங்கியுள்ள கணக்காய்வு அறிக்கைக்கமைய 12 பில்லியன் ரூபா பெறுமதியான செய்மதியின் சொத்து 2013, 2014 ஆண்டுகளின் நிதி அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் 2014, 2015 ஆண்டுகளில் இந்த சொத்து நிதி அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
சுபரீம் செட் நிறுவனம் முதலீட்டு சபைக்கு வழங்கியுள்ள அறிக்கைக்கமைய செய்மதியூடாக வழங்கப்பட்டுள்ள வருமானமாக எந்தவொரு தொகையும் குறிப்பிடப்படவில்லை. இந்த நிறுவனம் செய்மதி மாத்திரமின்றி மேலும் பல சேவைகளையும் வழங்குகிறது.
அதற்கமைய அவர்களின் கணக்காய்வு அறிக்கைகளில் 2015, 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளில் 19 மில்லியன் ரூபா, 28 மில்லியன் ரூபா, 34 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் செய்மதியின் ஊடாகக் கிடைக்கப் பெற்ற வருமானமாக அவை எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதேபோன்று 2016 இல் சுப்ரீம் செட் நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கமைய சைனா கிரேட் வோல் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கமைய சுப்ரீம் செட் 1 செய்மதிக்கு உரித்தான சொத்துக்களை நீக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே உண்மை நிலைமையாகும்.
முதலீட்டு சபையானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி நான் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு இதற்கு சமமான பதிலே வழங்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் தகவல்களுக்கிடையில் வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகிறது என்று எண்ணுகின்றோம். இவற்றுக்கு அப்பால் இது தொடர்பில் யோஷித ராஜபக்ஷவுக்கு ஏதேனும் தகவல் தெரிந்திருந்தால் அவர் அவற்றை வெளியிட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
இது நாட்டுக்கு இலாபமீட்டிதரக் கூடிய வேலைத்திட்டமாக அமைந்திருந்தால் 13 ஆண்டுகள் ராஜபக்ஷர்கள் மௌனம் காத்திருக்க மாட்டார்கள். முதலீட்டு சபையால் வழங்கப்பட்ட தகவலைத்தான் தெரிவிப்பதாக பிரதமர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
முதலீட்டு சபை விரைவில் இது தொடர்பில் மேலும் பல தகவல்களை வெளிப்படுத்தும். அத்தோடு தொலை தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவும் இது தொடர்பில் சர்வதேச தொலை தொடர்பாடல் சங்கத்திடம் தகவல்களைக் கோரியிருக்கின்றது.
வழங்கப்பட்ட தகவல்களிலும் சில குறைபாடுகள் உள்ளன. அச்சு பிரச்சினைகளால் கூட அந்த தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். விரைவில் சரியான தகவல்கள் வெளிப்படுத்தப்படும். இதற்காக எந்த வகையிலும் பிரதமர் பதவி நீக்கப்பட மாட்டார். அதற்கான அவசியமும் கிடையாது என்றார்.
No comments:
Post a Comment